தார் ரோட் பிட்ச் உருவாக்கி பல்ப் வாங்கிய பாகிஸ்தான்! கோபத்தில் ஐசிசி கொடுத்த தண்டனை

PAK
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டு மார்க் டைலர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடியது.

Pak vs Aus

- Advertisement -

அதன்பின் கடந்த 24 வருடங்களாக பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வந்த ஆஸ்திரேலியா ஒரு வழியாக தற்போது பாகிஸ்தானில் மீண்டும் விளையாட துவங்கியுள்ளது. இவ்வளவு ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய அணி விளையாடுவதால் இந்த தொடருக்கு உலகம் முழுவதிலுமுள்ள ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

பல்ப் வாங்கிய பாகிஸ்தான்:
ஆனால் அந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு இறுதியில் புஸ்வானமாக போனது என்றே கூற வேண்டும். ஆம் கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி 5 நாட்கள் முழுமையாக நடைபெற்று முடிந்த போதிலும் ட்ராவில் முடிந்ததால் பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Rawalpindi Pitch

ஏனெனில் அந்த போட்டிக்காக ராவல்பிண்டி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிட்ச் வழக்கமான ஒன்றாக அல்லாமல் தார் ரோட் போல பேட்டிங்க்கு மட்டுமே முழுக்க முழுக்க சாதகமாக இருந்தது. குறிப்பாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 476/4 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 459 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த இரு அணிகளும் விளையாடிய முதல் இன்னிங்ஸ் முடிவதற்குள் 4 நாட்கள் முடிந்துவிட்டது.

- Advertisement -

இறந்துபோன பிட்ச்:
அதன்பின் நடந்த 5-வது நாளில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 252/0 எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கூட 5வது நாள் பிட்ச் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி போட்டியின் முடிவை கொடுக்கும். ஆனால் இந்தப் பிட்சில் கடைசி நாளில் கடைசி ஒரு சில மணி நேரங்களில் வெளுத்து வாங்கிய பாகிஸ்தான் ஓப்பனிங் வீரர்கள் அடுத்தடுத்து சதம் அடித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

cummins

அந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இது ஒரு “இறந்து போன பிட்ச்” என போட்டி முடிந்த பின் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். மொத்தத்தில் பந்து வீச்சாளர்கள் கதறிய அந்த பிட்ச் பற்றி ஷாஹித் அப்ரிடி, சோயிப் அக்தர் போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். 24 வருடங்கள் கழித்து ஒரு தார் ரோட்டில் விளையாடுவதற்கா ஆஸ்திரேலியாவை அழைத்தீர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் பாகிஸ்தானை சரமாரியாக விமர்சனம் செய்தன. இருப்பினும் இது எதிர்பாராமல் நடந்தது என்றும் வருங்காலங்களில் இது போன்ற பிட்ச் அமைக்கப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா விமர்சனங்களுக்கு பதிலளித்து இருந்தார்.

- Advertisement -

கடுப்பான ஐசிசி தண்டனை:
இந்நிலையில் இவ்வளவு சர்ச்சைகளுக்கு உள்ளான அந்த பிட்ச்க்கு “சுமாருக்கும் கீழே (பிலோ ஆவரேஜ்)” என்ற மதிப்பை வழங்கியுள்ள ஐசிசி அதற்கு தண்டனையாக ஒரு கருப்பு புள்ளியை வழங்கியுள்ளது. இதுபற்றி ஐசிசி எலைட் பேனல் நடுவர் ரஞ்சன் மடுகள்லே கூறியுள்ளது பின்வருமாறு. “போட்டியின் 5 நாட்களிலும் பிட்ச் மாறாமல் ஒரே மாதிரியாக இருந்தது. போட்டி முழுவதும் வேக மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அது ஒத்துழைக்கவில்லை. எனது பார்வையில் இந்த பிட்ச் பேட் மற்றும் பந்துக்கு சமமான போட்டியை அளிக்கவில்லை. எனவே ஐசிசி விதிமுறைகளின்படி இந்த பிட்ச்சை சுமாருக்கும் கீழே என மதிப்பிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ICC

பொதுவாக ஒவ்வொரு சர்வதேச போட்டி நடந்த பின்பு அந்த பிட்ச் பற்றி மிகச் சிறப்பு, சிறப்பு, சுமாரானது, சுமாருக்கும் கீழே, மோசமானது, போட்டி நடத்த தகுதி இல்லாதது ஆகிய 5 பிரிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்து அந்த முடிவை அந்த போட்டி நடுவர் ஐசிசிக்கு அனுப்பி வைப்பார். அந்த வகையில் ராவல்பிண்டி பிட்ச் சுமாருக்கும் கீழே என மதிப்பிடப்பட்டு ஒரு கருப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இலங்கை பிங்க் டெஸ்ட் : பார்ம் அவுட்னு யார் சொன்னது? – சதம் விளாசி சாதிப்பாரா விராட் கோலி

ஒருவேளை அந்த பிட்ச் மோசமானது என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்கு தண்டனையாக 3 அல்லது 5 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும். பொதுவாக ஒரு பிட்ச் 5 வருடங்களுக்குள் 5 கருப்பு புள்ளிகளை பெற்றால் அதன்பின் ஐசிசி விதிமுறைப்படி அடுத்த 12 மாதங்களுக்கு அந்த மைதானத்தில் எந்த ஒரு சர்வதேச போட்டியையும் நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement