இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 86 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 74 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
2027 உலககோப்பை தொடரில் விளையாட வேண்டும் : ரவீந்திர ஜடேஜா
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவருக்கு அடுத்ததாக நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. எனவே இனி அவர் ஒருநாள் போட்டிகளில் இடம்பெறுவது கடினம் என்றே தெரிகிறது. இப்படி இந்திய ஒருநாள் அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு இடம் கிடைக்காதது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தான் விளையாட விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒருநாள் போட்டிகளில் நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். ஆனால் அது என் கைகளில் இல்லை. கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட வழியில் யோசிக்கிறார்கள். அதனால் எனக்கு இடம் கிடைக்காமல் போயிருக்கலாம்.
நான் ஏன் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை என எனக்கு தெளிவான விளக்கத்தை அவர்கள் கொடுத்தார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். ஆனால் அடுத்தமுறை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது முன்பு எதை செய்தேனோ அதை திரும்பவும் செய்ய ஆசைப்படுகிறேன். 2027 உலகக்கோப்பையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.
சென்றமுறை உலககோப்பைக்கு மிக அருகில் வந்து தவறவிட்டோம். எனவே அடுத்தமுறை எனக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதனை சரி செய்து கோப்பையை வெல்வோம் என ரவீந்திர ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 135 ரன்ஸ் சேசிங்.. கடைசி பந்தில் தெ.ஆ அணியை சாய்த்த நமீபியா.. வரலாற்று சாதனை வெற்றி
இத்தனை வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளேன். இனி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து மீண்டும் அதையே செய்ய முயற்சிப்பேன் என ஜடேஜா கூறியுள்ளார். ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை இனி அவருக்கு ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காது என்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிகிறது.



