ஷமி, உமேஷ் யாதவ், கே.எல் ராகுலை தொடர்ந்து 4 ஆவது வீரர் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகல் – விவரம் இதோ

Jadeja

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது என்றே கூறலாம்.

gill 2

மேலும் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்களுக்கு ஏற்படும் காயம் இந்திய அணியின் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர் துவங்குவதற்கு முன்னரே இசாந்த் சர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இதில் ரோகித் சர்மா மட்டும் காயத்திலிருந்து மீண்டு தற்போது மூன்றாவது டெஸ்டில் விளையாடி வருகிறார்.

ஆனால் இந்த நடப்பு தொடரின் முதல் போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், இரண்டாவது போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் காயத்தால் விலகி தொடரில் இருந்து வெளியேறினர். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் எடுத்த வலைப்பயிற்சியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்களான இருவருக்கு காயம் ஏற்பட்டது.

jadeja

அதன்படி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயமடைந்தனர். அதிலும் குறிப்பாக ஸ்டார்க் வீசிய அதிவேகப் பந்து ஜடேஜாவின் இடது கை கட்டை விரலில் பட்டது. இதனால் அடிபட்ட ஜடேஜா மைதானத்திலேயே வலியால் துடித்தார். இருப்பினும் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் அவர் வலி நிவாரணியை எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்தார். ஆனால் பேட்டிங் செய்து முடித்த பிறகு அவரால் மைதானத்திற்கு வரமுடியவில்லை மேலும் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கையில் அவருடைய விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், டிஸ்லொகேஷன் ஆகியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

- Advertisement -

jadeja 1

இதன் காரணமாக எஞ்சிய ஒரு போட்டியில் இருந்து ஜடேஜா வெளியேறுவார் என்றும் பிசிசிஐ அதிகாரபூர்வமான தகவல் வெளியிடும் என்று கூறப்படுகிறது. ஜடேஜாவின் இழப்பு இந்திய அணிக்கு பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் பந்துவீச்சிலும் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்த கூடிய இவர் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.