வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சதத்தை (104*) அடித்து 4 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
அந்த போட்டியின் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வினை மிஸ் செய்வதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தது ரசிகர்களின் நெஞ்சை தொடுவதாக அமைந்தது. ஏனெனில் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டது. இந்தியாவின் அந்த உலக சாதனை வெற்றி நடைக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆல் ரவுண்டர்கள் ஜோடி முக்கிய பங்காற்றினர்.
அஸ்வினை மிஸ் பண்றேன்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவ்வப்போது தமக்கு அடுத்தபடியாக அஸ்வின் ஓவரை போட வருவார் என்ற உணர்வு தோன்றுவதாக ஜடேஜா தெரிவித்துள்ளார். அப்போது தான் அஸ்வின் ஓய்வு பெற்று விட்டதால் விளையாட மாட்டார் என்பது நினைவுக்கு வருமென ஜடேஜா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“கண்டிப்பாக நாங்கள் அஸ்வினை மிஸ் செய்கிறோம். அஸ்வின் நீண்ட வருடங்களாக இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய பங்காற்றியுள்ளார். அவர் எங்களுடைய மேட்ச் வின்னர். ஆனால் தற்போது இந்தியாவில் அஸ்வின் இல்லாமல் நாங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறோம். அதனால் சில சமயங்களில் அடுத்த ஓவரை அஸ்வின் போடுவார் என்ற உணர்வு வரும்”
நாளை நானும் இருக்க மாட்டேன்:
“அப்போது தான் அஸ்வின் இங்கே இல்லாததால் வரமாட்டார் என்று நினைப்பேன். குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவர்களை இளம் வீரர்கள் என்று வரையறுக்க முடியாது. வருங்காலங்களில் ஜடேஜா இந்திய அணியில் இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். என்னுடைய இடத்தில் மற்றொருவர் விளையாட வந்து விடுவார்”
இதையும் படிங்க: 2023இல் சதமடித்த சாம்சனுக்கு ஒவ்வொரு நாளும் அநியாயம் பன்றாங்க.. நாளைக்கு ஜெய்ஸ்வாலும் காலி.. ஸ்ரீகாந்த்
“இவையெல்லாம் நடக்கும். அனைத்தும் சென்று கொண்டே இருக்கும். 2வது நாள் இரவில் நாங்கள் டிக்ளர் செய்வதைப் பற்றி சிந்தித்தோம். ஏனெனில் அஹமதாபாத் பிட்ச்சில் 280+ இலக்கு போதுமானது என்று நாங்கள் நினைத்தோம்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து 2வது போட்டியிலும் வென்று 2 – 0 (2) என்ற கணக்கில் ஒயிட் வாஸ் செய்து கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது.



