
பார்படாஸ் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று அசத்தியது. மேலும் தோனியின் தலைமையிலான இந்திய அணி 2007-ஆம் ஆண்டு பெற்ற வெற்றிக்கு பின்னர் தற்போது 17 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்த இறுதி போட்டி முடிந்ததும் இந்திய அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மூன்றாவதாக மற்றொரு சீனியர் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் இன்று தனது சமூகவலைத்தள பக்கத்தின் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஒரு பதிவினை வெளியிட்டுள்ள நட்சத்திர வீரரான ஜடேஜா பதிவிட்டதாவது :
முழு மனதுடன் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். டி20 சர்வதேச போட்டிகளில் இது என்னுடைய கடைசி போட்டி. இவ்வளவு தூரம் நான் இந்திய அணிக்காக இந்த வடிவத்தில் விளையாடியது மிகவும் பெருமையான ஒன்று. என்னுடைய திறன் அனைத்தையும் நான் எனது நாட்டிற்காக வழங்கி உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
டி20 வடிவத்தில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் மற்ற வடிவங்களில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலக கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவு இந்த தொடரின் மூலம் நிறைவேறியுள்ளது. எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி நிறைய நினைவுகள் என்னுள் இருக்கின்றன. அதனை மகிழ்ச்சியுடன் தொடர்பேன் என ரவீந்திர ஜடேஜா தனது சமூக வலைதளம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : எல்லாம் ஓகே.. அதுக்குன்னு இப்படியா? ராகுல் டிராவிடுக்கு இந்திய அணியின் வீரர்கள் குடுத்த சர்ப்ரைஸ் – என்ன நடந்தது?
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை இந்திய அணிக்காக 74 டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் மற்றும் 54 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு அடுத்து இந்தியாவின் மிகச்சிறந்த பீல்டராகவும் இவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.