
இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி கடந்த ஆண்டு 2024-ஆம் ஆண்டு வரை 23 ஆட்டங்களில் விளையாடி 20 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதம் என 663 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட 40 ரன்கள் சராசரியும் 143 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்து அசத்தலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தாலும் அவருக்கு இந்திய டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் அவருக்கு இந்திய ஏ அணியிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் இனியும் அவர் டி20 அணிக்கு திரும்புவாரா? என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதற்கு அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் அந்த இடத்தினை சரியாக நிரப்புவார் என்று பலராலும் பேசப்பட்டது. ஏனெனில் விராட் கோலியை போன்று நிலைத்து நின்றும் தேவையான நேரத்தில் அதிரடியாக விளையாடக் கூடிய திறமையும் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் உள்ளது.
இதன் காரணமாக நிச்சயம் டி20 அணியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடந்த ஓராண்டாகவே அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய டி20 அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் ஓரங்கட்டப்படுவது ஏன்? என்பது குறித்தும் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் என்ன? என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட்டின் தரத்தை பற்றி நாம் பேச தேவையில்லை. ஏனெனில் அவரால் எந்த அளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதை எப்பொழுதுமே அவர் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக அவர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடிய போதும் சிறப்பாகவே விளையாடியிருந்தார். அப்போதைய இந்திய அணியின் கேப்டன் வேறு, பயிற்சியாளரும் வேறு. ஆனால் தற்போது அவர்களுடன் எந்த தொடர்பும் அவருக்கு இல்லை.
தற்போது இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் புதிய கேப்டன் ஆகியோர் அவரைத் தாண்டி மற்றொரு அணிக்காக தயாராகிவிட்டனர். இருந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து தனது இடத்திற்காக போராடி வருகிறார். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபித்தால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் துவக்க வீரராக அவருக்கு வாய்ப்பு இனி கிடைக்காது.
இதையும் படிங்க : ஆஸியை சாய்த்த இந்தியா உ.கோ ஜெய்ச்சதை பாக்கல.. ஆனா அவங்க செய்தது உலகிற்கு நல்லது.. ஹீலி பேட்டி
ஏனெனில் இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், பிரியான்ஸ் ஆர்யா போன்ற பல பேர் ஒரு இடத்திற்கு போட்டியில் இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற திறமையான வீரருக்கு துவக்க வீரருக்கான இடத்தில் வாய்ப்பு கிடைக்காது. எனவே அவர் இனி மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்திற்காக வேண்டுமானால் போட்டி போடலாம் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.