இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த பல தொடர்களாகவே தனது வாய்ப்பிற்காக காத்திருக்கும் வேளையில் தொடர்ச்சியாக அவர் நிராகரிக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த முகமது ஷமி காயம் காரணமாக அடிக்கடி பாதிப்பை சந்தித்த வேளையில் அவரை இந்திய அணி சமீபகாலமாகவே ஓரம்கட்டி வருகிறது.
முகமது ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை? : ரவிச்சந்திரன் அஷ்வின் விளக்கம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அவரை இறுதி நேரத்தில் தேர்வு செய்யாத தேர்வுக்குழு அவரது உடற்தகுதியில் முன்னேற்றம் தேவை என்று கூறியிருந்தது. பின்னர் தொடர்ச்சியாக ரஞ்சி போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி மீண்டும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்த துவங்கியதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடுத்து நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த தொடரிலும் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் முகமது ஷமியின் கரியர் கிட்டத்தட்ட இந்திய அணியில் நிறைவுக்கு வந்துவிட்டது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முகமது ஷமி இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த விளக்கத்தை முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : முகமது ஷமி ரஞ்சி டிராபியில் விளையாடியதை வைத்து பார்க்கும் போது அவர் மூன்று போட்டிகளிலுமே சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ஆனால் அவர் களத்தில் எவ்வளவு நேரம் பீல்டிங் நிற்கிறார் என்பது தெரிய வேண்டும். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 ஓவர்கள் அவரால் பந்துவீச முடியுமா? பின்னர் மைதானத்தில் பீல்டிங்கில் நிற்க முடியுமா? என்ற விடயங்களை நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். அவரது உடற்தகுதி முழு அளவில் விளையாடும் அளவிற்கு இருந்தால் மட்டுமே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்வார்கள்.
இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட இருக்கும் நட்சத்திர வீரர்.. மினி ஏலத்தில் நடக்கவுள்ள போட்டி – விவரம் இதோ
ரஞ்சி கோப்பை போட்டிகளை பொறுத்தவரை அவர் பந்துவீசி அடிக்கடி டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று மீண்டும் வந்து பந்து வீசியதால் அவரை தேர்வு செய்ய மாட்டார்கள். முழுமையாக அவர் உடற்தகுதி பெற்று ஒருநாள் முழுவதும் களத்தில் நின்றால் மட்டுமே அவரை தேர்வு செய்வார்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



