
இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள் என மூன்று வகையான சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 212 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அதோடு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராகவும் இருந்து வருகிறார். தற்போது 37 வயதாகும் அஷ்வின் எதிர்வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வந்தால் 38 வயதை நிறைவு செய்வார். இதன் காரணமாக அஸ்வின் தற்போது தன்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசி அத்தியாயத்தை நெருங்கி விட்டார் என்று கூறலாம்.
இந்திய அணிக்காக இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து அஸ்வின் எப்போது ஓய்வு பெறுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏற்கனவே அஷ்வின் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அந்த பேட்டியில் பேசியிருந்த அஷ்வின் கூறியதாவது : நான் அனில் கும்ளேவின் மிகப்பெரிய ரசிகன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நான் அவருடைய சாதனையை முறியடிக்க விரும்பவில்லை. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 618 விக்கெட்டுகள் எடுத்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் எப்போது 618 விக்கெட்டுகளை எடுக்கிறானோ அப்போதே என்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டு என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி அதுதான் என்று கூறிவிடுவேன் என்று அஸ்வின் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : 239 ரன்ஸ்.. டெயில் எண்டர்களால் மாறிய போட்டி.. வெ.இ அணியை அடித்து விளாசும் தெ.ஆ
அவரது அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது முதல் போட்டியிலேயே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.