
கடந்த 2 மாதங்களாக பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்த ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற அந்த போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது.
அந்த முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று தைரியமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் அதற்கேற்றார்போல் பேட்டிங் செய்யாமல் 20 ஓவர்களில் வெறும் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 22 (16) கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) சிம்ரோன் ஹெட்மையர் 11 (12) என முக்கியமான வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 (35) ரன்கள் எடுத்தார். அந்த அளவுக்கு பந்துவீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
ராஜஸ்தான் பரிதாபம்:
அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சாஹா 5 (7) மேத்யூ வேட் 8 (10) என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் 3-வதாக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 (30) ரன்கள் எடுத்து சரிய விடாமல் தாங்கிப் பிடித்தார். அந்த நிலையில் மறுபுறம் நிதானமாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 45* (43) ரன்களும் கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பிய டேவிட் மில்லர் 35* (19) ரன்களும் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவரில் 133/3 ரன்கள் எடுத்த குஜராத் அபார வெற்றி பெற்றது.
மறுபுறம் 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து தவமாக போராடி இறுதிப் போட்டிக்கு வந்த ராஜஸ்தான் சுமாராக பேட்டிங் செய்து குறைவான இலக்கை நிர்ணயித்தது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. அதன் காரணமாக 2-வது கோப்பையை வென்று தங்களுக்கு முதல் கோப்பையை பரிசளித்து சமீபத்தில் மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பையும் அந்த அணி கோட்டை விட்டது.
சுமார் அஷ்வின்:
முன்னதாக இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பங்கேற்ற 17 போட்டிகளில் வெறும் 12 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து அவரின் தரத்திற்கு சுமாராகவே செயல்பட்டார்.
ஒரு ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளரான அவர் டி20 கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்கள் தனது பந்துகளில் அதிரடியாக ரன்களை அடித்துவிட கூடாது என்பதற்காக கேரம் பால் போன்ற வித்தியாசமான பந்துகளை அதிகமாக வீசுகிறார். சொல்லப் போனால் அவர் வீசும் 70க்கும் மேற்பட்ட பந்துகள் ஆஃப் ஸ்பின் பந்துகளாகவே இருக்கின்றன.
அதனால் ஒட்டுமொத்த போட்டிகளில் 7.91 என்ற எக்கனாமியில் ஓரளவு அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிகிறது என்றாலும் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. குறிப்பாக நேற்று இறுதிப்போட்டியில் 3 ஓவர்களை வீசிய அவர் 32 ரன்களை 10.67 என்ற மோசமான எக்கனாமியில் வீசியது குறைந்த இலக்கை கட்டுப்படுத்த முயன்ற ராஜஸ்தானுக்கு பின்னடைவை கொடுத்தது.
அதன் காரணமாக வரும் காலங்களில் அவர் ஆஃப் ஸ்பின் பந்துகளை அதிகமாக வீசினால் மட்டுமே விக்கெட்டுகள் தாமாக வரும் என இலங்கை ஜாம்பவான் மற்றும் ராஜஸ்தான் பயிற்சியாளர் குமார் சங்ககாரா கேட்டுக்கொண்டார். இதுபற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அஷ்வின் எங்களுக்கு சிறப்பான வேலையை செய்துள்ளார். களத்தில் தனது திறமையால் ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு உயர்ந்துள்ள அவர் ஒருசில அம்சங்களில் முன்னேற்றத்தை காண வேண்டும். குறிப்பாக ஒரு ஆப் ஸ்பின் பந்து வீச்சாளராக இருக்கும் அவர் முதலில் அதை அதிகமாக வீச வேண்டும் ” என்று கூறினார்.
சேவாக் அதிருப்தி:
இதே அம்சத்தைப் பற்றி முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் பேசியது பின்வருமாறு. “அஷ்வின் ஆஃப் ஸ்பின் பந்துகளை வீச வேண்டும். ஏனெனில் அது பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்கும். ஆனால் அவர் அதை விட்டுவிட்டு கேரம் பந்துகளை வீசுகிறார். அதுபோல் அதை அவர் வீசியிருந்தால் சுப்மன் கில்லுக்கு தொல்லை கொடுத்திருப்பதுடன் பாண்டியாவையும் அவுட் செய்திருப்பார். ஆனால் அவர் விக்கெட்டுக்கள் எடுக்க வித்தியாசமாக செயல்படுகிறார்” என்று பேசினார்.
இதுமட்டுமல்லாமல் அவரின் பந்துவீச்சை பார்த்த பல ரசிகர்களும் முதலில் அடிப்படையான ஆப் ஸ்பின்னர் என்பதை மறக்காமல் அந்த பந்துகளை அதிகமாகவும் கேரம் பால் போன்ற பந்துகளை பேட்ஸ்மேன்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் வீசுமாறு சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.