இந்திய அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தவற விட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு தொடர்ந்து வாய்ப்பு குடுக்கனும் : ரவிச்சந்திரன் அஷ்வின்
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கிடைத்த இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி உள்ளார். இந்த தொடரின் முதலாவது போட்டியில் அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் போனாலும், ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 78 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சாதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
அதோடு இந்திய அணி சார்பாக இரண்டாவது போட்டியில் அதிக ரன்கள் குவித்து வீரராக 105 ரன்களை அடித்திருந்தார். மேலும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலி ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி 358 ரன்கள் வரை இந்த போட்டியில் குவித்தது.
இந்நிலையில் நான்காவது இடத்தில் களமிறங்கி சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாடுக்கு தொடர்ச்சியான வாய்ப்பினை வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக விளையாடினாலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் என்பது இந்திய அணியில் கிடைத்ததில்லை. சில சமயம் அவருக்கு காயமும் வாய்ப்பை பறித்தது. அது துரதிஷ்டவசமானது.
தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அவருக்கு இனியும் தொடர் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் அவர் சுழற்பந்து வீச்சாளர்களையும் அட்டகாசமாக விளையாடுகிறார். நான்காவது இடத்தில் விராட் கோலியுடன் இணைந்து அவர் ஆடிய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. ஸ்பின்னர்களுக்கு எதிராக கால்களை வேகமாக நகர்த்தி விளையாடுவது, விக்கெட்டுக்கு இடையே வேகமாக ஓடுவது என அனைத்துமே சிறப்பாக உள்ளது.
இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஜெயிக்கனும்னா அந்த தமிழக வீரரை சேக்கனும் – சீக்கா ஸ்ரீகாந்த் கருத்து
மேலும் அவரிடம் அனைத்து வகையான ஷாட்டுகளும் உள்ளன. எனவே அவர் நான்காவது இடத்தில் விளையாட தகுதியான ஒரு வீரர் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு திரும்பினாலும் ருதுராஜ் கெய்க்வாடுக்கு இடமளிக்க வேண்டும் அவரால் நான்காவது இடத்தில் அற்புதமாக விளையாட முடியும் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



