
ஐசிசி 2024 20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது. அந்த தொடருடன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதே போல ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் வெற்றியுடன் பயிற்சியாளராக இந்திய அணியிலிருந்து விடை பெற்றார்.
ஒரு வீரராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் அடித்துள்ள அவர் கிட்டத்தட்ட சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதே போல வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கேப்டன் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அத்துடன் கடைசியாக (2007) அவருடைய தலைமையில் தான் இங்கிலாந்து மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
அஸ்வின் நெகிழ்ச்சி:
ஆனால் அப்படி கேப்டனாக ராகுல் டிராவிட் செய்த சாதனைகளை 2007 உலகக் கோப்பையில் சந்தித்த படுதோல்வி மொத்தமாக மூழ்கடித்தது என்றே சொல்லலாம். ஏனெனில் வெஸ்ட் மண்ணில் நடைபெற்ற அந்த உலகக் கோப்பையில் தேவையற்ற மாற்றங்களுடன் சுமாராக விளையாடிய இந்திய அணி வங்கதேசத்திடம் தோற்று பரிதாபமாக வெளியேறியது. அந்த தோல்வியால் சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி, கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் சோகமடைந்ததை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது.
இந்நிலையில் 2007இல் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இம்முறை டிராவிட் பயிற்சியாளராக உலகக் கோப்பை வென்றதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். மேலும் உலகக் கோப்பையை கொடுத்த விராட் கோலியை கட்டிப்பிடித்து அழுத ராகுல் டிராவிட் ஆனந்தக் கண்ணீரில் 2007 வலியையும் ஏக்கத்தையும் பார்த்ததாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ராகுல் டிராவிட்டை அழைத்து விராட் கோலி கோப்பையை கொடுத்ததே எனக்கு பிடித்த தருணம். அதை வாங்கிய ட்ராவிட் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இங்கே நான் ஒரு புனிதமான நபரை பேச விரும்புகிறேன். குறிப்பாக 2007 உலகக் கோப்பையில் டிராவிட் தலைமையில் இந்தியா நாக் அவுட் செய்யப்பட்டது. அதனால் அந்த காலகட்டங்களில் இந்தியா ஒரு போட்டியில் தோற்றால் உடனே ராகுல் டிராவிட் என்ன செய்கிறார் என்று கேட்டனர்”
இதையும் படிங்க: அடுத்த 2027 உலககோப்பையில் ஆடலாம்.. ஆனா ஒரு கண்டிஷன்.. மறைமுகமாக கோலி ரோஹித்துக்கு கடிவாளம் போட்ட கம்பீர்
“அப்படிப்பட்ட ராகுல் டிராவிட் கடந்த 2 – 3 வருடங்களாக இந்திய அணியில் என்ன செய்தார் என்பதை நான் அறிவேன். மிகவும் சமநிலையுடன் இருந்த அவர் இந்திய அணியின் அணுகுமுறையை மாற்ற எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதும் எனக்கு தெரியும். வீட்டிலிருந்த போது கூட அணியின் வெற்றிக்காக திட்டமிட்ட அவர் ஒவ்வொரு வீரருக்கும் என்ன செய்தார் என்பதும் தெரியும்” எனக் கூறினார்.