
சர்வதேச நவீன கிரிக்கெட்டில் இந்தியாவை எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக கட்டமைத்த பெருமைக்குரியவர்கள். அதில் 3 ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த தோனி ஒரு கட்டத்தில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சீனியர்களை கழற்றி விட்டார். மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான், அஸ்வின் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்தார்.
அவருக்குப் பின் பொறுப்பேற்ற விராட் கோலி ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலைமையை உருவாக்கினார். அத்துடன் அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இந்தியா வரலாறு காணாத வெற்றிகளை சந்தித்தது. அதைத் தொடர்ந்து தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார்.
சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றும் அவருடைய தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் தம்முடைய முன்னாள் இந்நாள் கேப்டன்களான தோனி, விராட் ரோஹித் ஆகியோரின் சிறப்புகள் பற்றி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “வீரர்களின் பார்வையில் தோனியிடம் எனக்கு ஒரு விஷயம் மிகவும் பிடிக்கும். அவர் வீரர்களுக்கு நீண்டகால வாய்ப்பு கொடுத்தார். எடுத்துக்காட்டாக ரவீந்திர ஜடேஜா அல்லது சுரேஷ் ரெய்னாவை பாருங்கள். ரவீந்திர ஜடேஜாவை ஃபினிஷராக வளர்த்த தோனி கடைசி வரை அவரிடம் அதே வேலையை கொடுத்தார். அது இந்திய அணிக்கு பயனை கொடுத்தது”
“ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக முன்னேற உதவியது. எனவே தோனி ஒருவரை கண்டறிந்து விட்டால் அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பார். அதுவே அவரிடம் பிடித்த விஷயம். அவர் கூலாகவும் இருப்பார். விராட் கோலி உத்வேகமாகவும் தமக்கு தாமே சாதித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருப்பார். அதே போல மற்ற வீரர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்”
இதையும் படிங்க: 2013இல் டிராவிட் சொன்ன வார்த்தை தான்.. இந்தளவுக்கு முன்னேற உதவுச்சு.. புதிய கோச் பற்றி சஞ்சு சாம்சன்
“ரோஹித் சர்மா அணியின் சூழ்நிலையை மிருதுவாக வைத்திருப்பார். தோனி, விராட் போலவே சமநிலை மற்றும் தந்திரோபாயங்களில் அவர் வலுவானவர். ஒரு பெரிய தொடர் அல்லது போட்டி வந்தால் அதற்காக பயிற்சியாளர் மற்றும் அனலைஸ்ட் குழுவுடன் உட்கார்ந்து எதிரணியின் பலவீனம் என்ன, என்ன திட்டம் வகுக்கலாம் என்பதில் ரோஹித் அதிகமாக கவனம் செலுத்துவார். அவரும் வீரர்களுக்கு 100% ஆதரவை கொடுப்பார்” என்று கூறினார்.