வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்தப் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து 5 விக்கெட்டுகள் எடுத்து எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தினார்.
குறிப்பாக 144-6 என தடுமாறிய போது பேட்டிங்கில் 113 ரன்கள் குவித்த அவர் இந்தியாவை காப்பாற்றி ஆட்டநாயகன் விருது வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார். முன்னதாக அந்தப்போட்டி துவங்கும் போது சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் பெரியளவில் இல்லை. அதனால் சென்னையில் ஏன் ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க வரவில்லை என்று விராட் கோலி தம்மிடம் வருத்தப்பட்டதாக அஸ்வின் கூறியுள்ளார்.
விராட் கோலி ஏமாற்றம்:
இது பற்றி அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வர்ணனையாளர் அஸ்வந்த் போபோவிடம் பேசியது பின்வருமாறு. “முதல் நாளில் மைதானம் முழுவதுமாக காலியாக இருந்தது. முதல் நாளே ஏன் இப்படி மைதானம் காலியாக இருக்கிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அப்போது ஏன் சென்னையில் யாருமே இந்தியாவின் டெஸ்ட் போட்டியை பார்க்க வரவில்லை என்று விராட் கோலி தொடர்ந்து என்னிடம் கேட்டார்”
“இருப்பினும் அந்த நேரத்திலிருந்து நிறைய ரசிகர்கள் வந்தனர். இந்த நேரத்தில் ஏன் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க சிரமப்படுகிறார்கள்? என்பதை நான் உங்களிடம் கேட்கிறேன்” என்று சொல்லி அஸ்வதிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு கவுன்டர் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்குவதில் சிரமத்தை சந்திப்பதாக அஸ்வத் கூறினார்.
ஒரு கவுன்டர் மட்டுமே:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் சீசன் டிக்கெட்டை நீங்கள் வாங்கி விட்டால் அதை 5வது நாள் வரை வைத்துக் கொள்ள முடியும். இருப்பினும் போட்டி 4 அல்லது 5வது நாள் வரை வரை செல்லுமா என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். அதனால் சீசன் டிக்கெட்டை வாங்குவதில் மக்களிடம் தெளிவில்லாததால் நாள் டிக்கெட்டை வாங்க வரும் போது கூட்டம் அதிகரிக்கிறது”
இதையும் படிங்க: நம்பர் ஒன்னா இருக்கும் பும்ரா.. இதை செஞ்சா என்னை மட்டுமல்ல கபில் தேவையும் மிஞ்சுவாரு.. ஜஹீர் கான் அட்வைஸ்
“அதே போல சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு கவுன்டர் மட்டுமே இருப்பது போன்ற நிறைய பிரச்சனைகளும் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல முதல் நாளில் ரசிகர்கள் அதிகம் இல்லை. இருப்பினும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர்” என்று கூறினார். இதற்கிடையே முதல் நாளில் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் வரவில்லை. பின்னர் விலை குறைக்கப்பட்ட பின் ரசிகர்கள் வந்ததாக மற்றொரு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.



