இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 17-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வெடுப்பதால் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அந்த நிலைமையில் அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:
கேப்டன் ரோகித் சர்மா திரும்பியுள்ள அந்த அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், ரவி பிஸ்னோய், அர்ஷிதீப் சிங் அக்சர் படேல் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
ஆனால் சமீபத்திய டி20 போட்டிகளில் சுமாராக செயல்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பளித்துள்ள இந்திய நிர்வாகம் தனது கடைசி போட்டியில் 77 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்காதது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அதேபோல் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கடைசி நேரத்தில் விலகிய கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் காயத்தை பொறுத்து சேர்க்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

அஷ்வின் கம்பேக்:
இந்த அணியில் குறிப்பிடத்தக்க அம்சமாக தமிழகத்தின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 8 மாதங்கள் கழித்து மீண்டும் வெள்ளைப் பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010இல் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அபாரமாக செயல்பட்டதால் 2016 உலக கோப்பை வரை நிரந்தரமான இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் 2017இல் அவரை வளர்த்த கேப்டன் தோனி பதவி விலகியதும் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அதே வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் சுமாராக பந்து வீசினார் என்பதற்காக ஒருநாள் மற்றும் டி20 எனப்படும் இந்திய வெள்ளை பந்து அணியிலிருந்து அவரை மொத்தமாக கழற்றி விட்டார்.
அவருக்கு பதில் சஹால் – குல்தீப் ஆகிய புதிய சுழல் பந்துவீச்சு கூட்டணியை உருவாக்கிய அவர் டெஸ்ட் போட்டியிலும் குல்தீப் யாதவை கொண்டு வர முயற்சித்தார். ஆனால் அதற்கு இடம் கொடுக்காத அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் போட்டிகளில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தார். மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற நோக்கத்தில் இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வந்த போதிலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப், டெல்லி போன்ற அணிகளில் அஷ்வின் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

முயற்சித்தும் முடியல:
இருப்பினும் 4 வருடங்களாக வாய்ப்பு கிடைக்காததால் அஷ்வினின் வெள்ளை பந்து கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே அனைவரும் நினைத்தனர். ஆனால் 2021 சீசனில் சஹால் – குல்தீப் ஆகிய இருவருமே பார்மை இழந்து சுமாராக பந்து வீசியதால் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 4 வருடங்கள் கழித்து நேரடியாக தேர்வாகி அபாரமான கம்பேக் கொடுத்த அஷ்வின் அந்த உலகக் கோப்பையில் மோசமாக அல்லாமல் சிறப்பாகவே செயல்பட்டார். அதன் காரணமாக நவம்பரில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தேர்வாகி அசத்திய அவர் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் விளையாடிய போது காயத்தால் பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பின் குணமடைந்த அவரை கழற்றிவிடும் வகையில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் டி20 தொடரில் இந்தியா நிர்வாகம் தேர்வு செய்யவில்லை. ஆனால் அடுத்ததாக நடந்த ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானுக்காக 12 விக்கெட்களை 7.51 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்த அவர் பேட்டிங்கில் நிறைய போட்டிகளில் டாப் ஆர்டரில் களமிறங்கி முதல் முறையாக அரைசதம் அடித்து மொத்தம் 191 ரன்களை 141.48 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்தார்.

ஆனாலும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் தேர்வுக்குழு அவரை கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் அந்த தொடரிலும் தற்போதைய இந்திய டி20 அணியிலும் குல்தீப் யாதவ், சஹால், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் என இருக்கும் அத்தனை சுழல் பந்து வீச்சாளர்களும் லெக் ஸ்பின் பவுலர்களாக இருப்பது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதனால் நல்ல ஆஃப் ஸ்பின்னர் இல்லாத காரணத்தால் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட நினைத்த அஷ்வினை வேறு வழியின்றி மீண்டும் தேர்வு செய்துள்ளது அவரது திறமைக்கு மீண்டும் கிடைத்த பரிசாகும்.



