IND vs ENG : இந்திய அணியுடன் இணைந்த தமிழக வீரர், ரசிகர்கள் மகிழ்ச்சி – விராட் கோலி மாதிரி இல்லாமல் ரோஹித் நம்புவாரா

Ashwin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டி வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் 5-வது போட்டிக்கு முன்பாக கரோனா பரவல் ஏற்பட்டதால் அந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.

அந்த நிலைமையில் தற்போது நடைபெறும் அந்த தொடரின் கடைசி போட்டியில் விராட் கோலி பெற்றுக்கொடுத்த முக்கால்வாசி வெற்றியை புதிய கேப்டனாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா பினிஷிங் செய்து 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் வெற்றிக் கொடியை நாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் பலவீனமாக இருந்த இங்கிலாந்து தற்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவாக மாறியுள்ளதால் அந்த அணியும் இந்தியாவிற்கு கடுமையான சவாலை கொடுத்து தொடரை சமன் செய்ய போராட உள்ளது.

- Advertisement -

தனிமையில் அஷ்வின்:
அப்போட்டிக்கு தயாராகும் வகையில் ஜூன் 23-ஆம் தேதியன்று லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக துவங்கிய 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. முன்னதாக இந்த தொடரில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் கடந்த வாரமே தனி விமானம் வாயிலாக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால் அதில் இந்தியாவுக்காக விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கரோனா பரிசோதனையின்போது தொற்று உறுதி செய்யப்பட்டதால் இங்கிலாந்துக்கு செல்லாமல் தனிமைப் படுத்தப்பட்டார். கடைசியாக ராஜஸ்தானுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்காத நிலைமையில் தனது சொந்த ஊரான சென்னையில் உள்ள உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் பங்கேற்றதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிகிறது.

- Advertisement -

நம்பாத விராட்:
அதனால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அவர் பங்கேற்பதில் சிக்கலும் சந்தேகமும் எழுந்தது. இருப்பினும் 2 – 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவர் தற்போது அதிலிருந்து குணமடைந்ததால் உடனடியாக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்று இந்திய அணியினருடன் இணைந்து கொண்டார். இதை பிசிசிஐ தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இருப்பினும் தாமதமாக இணைந்த அவரால் தற்போது லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் பயிற்சி போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் இதர வலை பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் 5 சதங்களையும் அடித்துள்ள அஷ்வின் கடந்த பல வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்துவீச்சாளராகவும் நல்ல ஆல்ரவுண்டராகவும் வலம் வருகிறார். ஆனால் இதற்கு முன் இருந்த விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி தலைமை கூட்டணி வெளிநாடுகளில் இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்ற கோணத்தில் இந்தியாவுக்கே வெளியே நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது.

- Advertisement -

இத்தனைக்கும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் சமீப காலங்களில் வெளிநாடுகளிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள அஸ்வின் அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 2020/21 சீசனில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அப்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப ரன்களில் காலி செய்து பேட்ஸ்மேனாகவும் சிட்னி டெஸ்டில் வலியுடன் இந்தியாவுக்காக தோற்கவேண்டிய போட்டியை ஹனுமா விஹாரியுடன் இணைந்து போராடி டிரா செய்தார்.

அத்துடன் கடந்த 2021இல் இதே இங்கிலாந்து மண்ணில் சௌதாம்ப்டன் நகரில் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்கள் தடுமாறிய போது 2 இன்னிங்சிலும் ஒரு சுழல் பந்து வீச்சாளராக அஸ்வின் தான் நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

ஆனாலும் அவரை நம்பாத விராட் கோலி கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 4 போட்டிகளில் அவருக்கு ஒரு முறை கூட வாய்ப்பளிக்காமல் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து வென்று காட்டினார். இத்தனைக்கும் பல முன்னாள் வீரர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகமும் அவருக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டதை கடைசிவரை அவர் காதில் வாங்கவில்லை. ஆனால் தற்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஆகியோர் அஷ்வின் மீது நம்பிக்கை வைத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த முக்கியமான போட்டியில் வாய்ப்பு கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement