
இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. ஏனெனில் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருக்கும் இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. அப்படி இருந்தும் சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது வரலாற்று தோல்வியை கொடுத்தது.
அதனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதியை பெறாத இலங்கையிடம் நம்பர் ஒன் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. முன்னதாக இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய சொந்த மண்ணில் பெரும்பாலும் சிறிய மைதானங்களில் ஃபிளாட்டான பிட்ச்சில் விளையாடிப் பழகியதாக இலங்கை வீரர் தீக்சனா தெரிவித்தார். ஆனால் தங்களுடைய கொழும்பு மைதானம் பெரியதாகவும் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் நிலைமை:
எனவே அதைப் பயன்படுத்தி இந்தியாவை எளிதாக வீழ்த்தியதாக அவர் வெற்றிக்கு பின் பேசியிருந்தார். இந்நிலையில் அவருடைய கருத்து முற்றிலும் உண்மை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் சுழலுக்கு சாதகமான மைதானத்தை வைத்து இந்திய அணியை இலங்கை வீழ்த்தியது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு.
“இந்தியா வத்திப்பேட்டி போன்ற மிகவும் சிறிய மைதானங்களில் ஃபிளாட்டான பிட்ச்களில் விளையாடி பழகி விட்டார்கள். எனவே நாங்கள் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை கொடுக்கலாம் என்று முடிவெடுத்ததாக தொடரின் முடிவில் தீக்சனா சொன்னார். அதற்கு “என்னடா பச்சையாக இப்படி சொல்லிவிட்டாய்” என்று நம்மூரில் சிலர் கேட்கலாம். ஆனால் அது தான் உண்மை. அதாவது சிறிய மைதானத்தில் இந்திய அணி விளையாடி பழகிவிட்டார்கள்”
“ஆனால் நம்மிடம் அந்தளவுக்கு பேட்டிங் பவர் இல்லை என்பதை இலங்கை உணர்ந்துள்ளது. நம்மால் 230 – 250 ரன்கள் மட்டுமே அடிக்க முடியும் என்பதை உணர்ந்து இலங்கை சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விளையாட முடிவெடுத்தனர். அவர்களிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்த நிலையில் நிறைய ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே ஸ்பின்னர்களை வைத்து நாம் விளையாடி பார்ப்போம் என்று இலங்கை முடிவெடுத்தது சாதமாக அமைந்தது. மறுபுறம் தோல்வியை சந்தித்த இந்திய அணி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அனைவரும் சொல்கின்றனர்”
இதையும் படிங்க: மறுபடியும் 36க்கு ஆல் அவுட்டாகிடாதீங்க.. 2024 தொடருக்கு இந்தியா தயாராக போட்டியை அறிவித்த ஆஸி வாரியம்
ஆனால் இந்தியாவில் தற்போது சுழலுக்கு சாதகமான மைதானங்கள் பெரும்பாலும் இல்லை. வெளிநாட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 10 – 15 வருடங்களில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிட்ச்கள் வேகத்துக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளன. அதனால் இப்போது ரஞ்சிக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் உங்களுக்கு ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சாளர்கள் தான் தேவை. இதனால் வருங்காலங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கூட இந்தியாவை சாய்க்க சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்படலாம்” என்று கூறினார்.