ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்தது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. முன்னதாக இந்திய அணிக்காக சமீபத்திய வருடங்களில் 3 வகையான ஃபார்மெட்டிலும் இளம் வீரர் சுப்மன் கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்துள்ள அவர் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார். அதன் காரணமாக தேர்வுக்குழு அவரை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆசிய கண்டத்திற்கு வெளியே நடைபெறும் போட்டிகளிலும் கில் பெரும்பாலும் தடுமாற்றமாக விளையாடுகிறார்.
கில் பதிலடி:
அதன் காரணமாக அவருக்கு துணை கேப்டன்ஷிப் எதற்கு? என்று சில முன்னாள் வீரர்களும் நிறைய ரசிகர்களும் விமர்சித்தார்கள். அந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 229 ரன்களை துரத்திய இந்தியா சவாலான பிட்ச்சில் கொஞ்சம் தடுமாற்றமாகவே விளையாடியது. ஆனால் ஒருபுறம் நங்கூரமாக விளையாடிய கில் சதத்தை அடித்து 101* (129) ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த தன் மீது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்கத் தூசி என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் கோப்பை அணி அறிவிக்கப்பட்ட போது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்த்த குழப்பத்தால் சுப்மன் கில்லுக்கு எப்படி இடம் கிடைத்தது என்று சிலர் விமர்சித்தார்கள்”
அஸ்வின் பாராட்டு:
“அவருக்கு துணைக் கேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்றும் பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் அவர் பதில் கொடுத்து வருகிறார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அசத்துவதற்காக நான் இங்கே இருக்கிறேன் என்பதை அவர் காண்பிக்கிறார். டி20 கிரிக்கெட்டிலும் அவருடைய புள்ளிவிவரங்கள் நன்றாகவே உள்ளது”
இதையும் படிங்க: நெருங்கக் கூட முடியாது.. இந்த 2 பலவீனத்தால் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தும்.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“டெஸ்ட் போட்டிகளில் அவருடைய ஆட்டத்தின் மீது கேள்வி எழுவது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 2023 உலகக் கோப்பை கில் தரத்திற்கு நிகராக செயல்படவில்லை. அதையும் தாண்டி ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தங்கத் தூசியை போன்றவர். முதல் போட்டியில் பொறுமையை காட்டிய அவர் சேசிங்கை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். அது பேட்டிங் செய்ய எளிதான ஆடுகளமாக இல்லை. ஆனால் அவர் அதற்கு தன்னை உட்படுத்திக் கொண்டு சிறப்பாக பேட்டிங் செய்தார்” என்று கூறினார்.



