வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து இரண்டாவது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்கியது. மழையால் காலை 10.30 மணிக்கு தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு 24 பந்துகள் எதிர்கொண்டு தடுமாறிய ஜாகிர் ஹசன் 0 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார். அதே போல மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த சாத்மான் இஸ்லாமையும் 24 ரன்களில் ஆகாஷ் தீப் அவுட்டாக்கினார். அதனால் 29-2 என தடுமாறிய வங்கதேசத்துக்கு அடுத்ததாக கேப்டன் நஜ்முல் சாந்தோ மற்றும் மோனிமுல் ஹைக் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அஸ்வின் அபார சாதனை:
ஆனால் 3வது விக்கட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் கேப்டன் சான்டோவை 31 ரன்கள் அஸ்வின் அவுட்டாக்கினார். அதையும் சேர்த்து இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய ஆசிய நாடுகளில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அஸ்வின் மொத்தம் 420 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஆசிய கண்டத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை உடைத்த அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் அனில் கும்ப்ளே ஆசிய கண்டத்தில் விளையாடிய போட்டிகளில் 419 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 300 விக்கெட்டுகளுடன் அந்தப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக இலங்கை ஜாம்பவான் முக்கிய முரளிதரன் 612 விக்கெட்டுகளுடன் ஆசிய கண்டத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக திகழ்கிறார்.
மழையால் முடிந்த ஆட்டம்:
தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்கு அடுத்தபடியாக 420 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். இது போக வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜஹீர் கான் சாதனையையும் அஸ்வின் சமன் செய்துள்ளார். இருவரும் தலா 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த முஸ்பிகர் ரஹீம் 6* ரன்களும் மோனிமுல் ஹைக் 40* ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிங்க: ஃபேப் 4இல் விராட் கோலி தான் அதுல அழுத்தத்தை தாங்கி தனியாளா ஜெய்ச்சு கொடுக்குறாரு.. தமீம் இக்பால்
அதனால் வங்கதேசம் 107-3 எடுத்திருந்த போது மழை வந்து போட்டியை நிறுத்தியது. தொடர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தால் தேநீர் இடைவெளிக்கு முன்பாகவே முதல் நாள் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். எனவே நாளைய போட்டியில் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் ஜாகீர் கானை முந்தி அஸ்வின் மற்றுமொரு சாதனை படைப்பார்.



