சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றின் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. இருப்பினும் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் போன்ற முதன்மை கிரிக்கெட் வீரர்கள் இன்னும் முழுமையாக குணமடையாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.
அதை விட தாறுமாறான சோதனைகளை செய்யும் ராகுல் டிராவிட் இதுவரை ஒரு இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை என்ற நிர்பந்தத்திற்கு தேவையான சோதனையை செய்யாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்து வருகிறது. ஏனெனில் 2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியின் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோஹித், கில், விராட், ஸ்ரேயாஸ், ராகுல், பாண்டியா என டாப் 6 பேருமே வலது கை வீரர்களாக இருப்பது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அஸ்வின் யோசனை:
இந்நிலையில் உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்ப்பதற்கு நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி கேப்டன் பாண்டியா முதல் சஞ்சு சாம்சன் வரை இதர அனைத்து வீரர்களை காட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் திலக் வர்மா சரியானவராக இருப்பார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இருப்பினும் ஒரு தொடரில் மட்டுமே அசத்தி பெரிய அனுபவத்தை கொண்டிராத அவரை நேரடியாக தேர்வு செய்யவில்லை என்றாலும் குறைந்தபட்சம் பேக் அப் வீரராக தேர்வு செய்யலாம் என்று அஸ்வின் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரோகித் சர்மா போல விளையாடும் திறமை அவரிடம் இருப்பதாக தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “திலக் வர்மாவின் வளர்ச்சி அனைவரையும் அவரை பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக முதல் டி20 போட்டியில் மெதுவான பிட்ச்சில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். மேலும் ஒரு இந்தியர் அறிமுகப் போட்டியில் விளையாடுவதை போல் அவருடைய பேட்டிங் ஸ்டைல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக அவர் ரோகித் சர்மா ஸ்டைலை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டார்”
“ஏனெனில் பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் ஃபுல் ஷாட் அடிப்பதற்கு செட்டாக மாட்டார்கள். ஆனால் இயற்கையாகவே ஆஸ்திரேலிய வீரரை போல ஃபுல் ஷாட்டை பவுண்டரிக்கு வெளியே அடிக்கும் திறமை அவருடைய ஆட்டத்தில் இருக்கிறது. ஆரம்பத்திலேயே இப்படி சொல்வது அதிகம் என்றாலும் அது மிகச் சிறப்பான இன்னிங்ஸ். உலகக் கோப்பையை பொறுத்த வரை இது கழுத்தை இறுக்கும் தருணமாக இருக்கிறது. ஒருவேளை தேவையான பேக் அப் வீரர்கள் இல்லாமல் போனால் அவர்கள் திலக் வர்மாவை பற்றி யோசிப்பார்களா? ஏனெனில் சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டார்”
“ஆனால் அவரை விட தற்போது இந்திய அணியில் பஞ்சமாக இருக்கும் இடது கை பேட்ஸ்மேன் இடத்தை நிரப்பும் அளவுக்கு திலக் வர்மா இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. காரணம் தற்போதைய இந்திய அணியில் 7வது இடத்தில் களமிறங்கும் ஜடேஜா மட்டுமே இடதுகை வீரராக இருக்கிறார். மறுபுறம் ஆஸ்திரேலியாவில் அஸ்டன் அகர் இங்கிலாந்தில் மொயின் அலி, அடில் ரசித் என எதிரணிகளில் நிறைய ஆஃப் ஸ்பின்னர்கள் இருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க:IND vs WI : அத்து மீறி நடந்து கொண்ட நிக்கோலஸ் பூரான் – ஐசிசி 2 தண்டனை வழங்கி அதிரடி அறிவிப்பு, நடந்தது என்ன?
“அதாவது பெரும்பாலான எதிரணிகளில் இடதுகை வீரர்களுக்கு சவாலை கொடுக்கும் விரல் ஸ்பின்னர்கள் இல்லை. அதனாலயே திலக் வர்மா முக்கிய வீரராக இருப்பார். ஆனாலும் இது ஆரம்ப கட்ட முடிவாக இருந்தாலும் அவரைப் பற்றி தேர்வு குழுவினர் யோசிப்பார்களா? ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸை பார்க்கும் எந்த தேர்வுக்குழு உறுப்பினருக்கும் வாவ் என்ற ரியாக்சனே கொடுக்கத் தோன்றும்” என கூறினார்.