
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்ல அத்தொடரில் 4 போட்டிகளை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. அந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்பது சந்தேகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது பயிற்சி டெஸ்ட் போட்டியில் மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் தடுமாறினார்கள். ஆனால் முதல் முறையாக விளையாடிய ஜுரேல் 80, 68 ரன்கள் குவித்து இந்திய ஏ அணியின் வெற்றிக்கு போராடினார்.
எனவே அவர் முதல் போட்டியில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் ரவி சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவரால் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக எளிதாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். எதிர்புறம் விக்கெட்டுகள் இழந்து அணி தடுமாறிய போது அவர் இங்கே மிகவும் பொறுமையுடன் அமைதியுடன் அழுத்தத்தில் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்”
“அது என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் அழுத்தத்தின் கீழ் நிறைய வீரர்கள் தடுமாறியதை நீங்கள் பார்த்தீர்கள். அழுத்தத்தின் கீழ் அந்த வீரர்கள் பதற்றமாக விளையாடியதையும் நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் இந்த பையன் அது போன்ற சமயங்களில் மிகவும் பொறுமையுடன் பதறாமல் நின்றார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் கூட விக்கெட்டுகள் விழுந்த போது அவர் நிதானமாக விளையாடி அசத்தினார்”
“அந்த வகையில் இங்கே விளையாடுவதற்கு அவர் நல்ல முறையில் தயாராக இருப்பதாக நான் பார்க்கிறேன். அப்படி இருந்தால் நீங்கள் அவருக்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம். இங்கே 80, 60 ரன்கள் அடித்தது அவருக்கு சிறப்பாக விளையாடுவதற்கான நல்ல தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். நல்ல பார்மில் இருக்கும் அவர் பந்தை தடுத்து நிறுத்துபவர் மட்டுமல்ல”
இதையும் படிங்க: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் புஜாராவும் இருக்கார் – ஆனா புது அவதாரம் எடுத்திருக்கார்
“நல்ல ஷாட்டுகளை வைத்துள்ளார். டெயில் எண்டர்களுடன் அவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பது முக்கியமாகும். எனவே சுப்மன் கில்லை மேலே பேட்டிங் செய்ய அனுப்பினால் மிடில் ஆர்டரில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அப்படி தான் ரோகித் இல்லையெனில் இந்தியா தங்களுடைய சமநிலையை சரி செய்ய பார்க்க வேண்டும்” என்று கூறினார்.