சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடியது. பலம் வாய்ந்த இந்திய அணி அனுபவமில்லா அமெரிக்கா அணியை எளிதாக வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்கு மத்தியிலேயே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது என்றே கூறலாம்.
சூரியகுமார் யாதவை பாராட்டிய ரவி சாஸ்திரி :
ஏனெனில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஒருபுறம் சூரியகுமார் யாதவ் மட்டும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 84 ரன்கள் குவித்து இந்திய அணியை 161 ரன்கள் என்கிற டீசன்டான ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி வெற்றியும் பெற்று இருந்தது.
ஆனால் இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் மட்டும் ஆட்டமிழந்து இருந்தால் முடிவு மாறி இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு சூரியகுமார் யாதவின் இந்த பொறுப்பான ஆட்டத்தை பலரும் பாராட்டியும் வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சூரியகுமார் யாதவின் இந்த இன்னிங்ஸை பற்றி கூறியதாவது : சூரியகுமார் யாதவ் இந்த போட்டியில் சூழலுக்கு ஏற்றார் போன்று விளையாடினார்.
அதிரடியாகத்தான் விளையாடுவோம் என்று கூறியபடி அவர் விளையாடியிருந்தால் நிச்சயம் நிலைமை மோசமாகியிருக்கும். ஆனால் சூரியகுமார் யாதவ் மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போன்று தன்னை தகவமைத்துக்கொண்டு புத்திசாலித்தனமாக விளையாடினார். அதனால் தான் அவரால் கடைசி நேரத்தில் ரன்களை குவிக்க முடிந்தது. இறுதிக்கட்டத்தில் சூரியகுமார் தேர்ந்தெடுத்த ஷாட்டுகள் அனைத்தும் புத்திசாலித்தனமாக இருந்தது.
இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் படு மோசமான சாதனையை நிகழ்த்திய தசுன் ஷானகா – விவரம் இதோ
பந்தின் வேகத்தை பயன்படுத்தி அவர் விளையாடிய விதம் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பாடமாக இருக்கலாம். மைதானத்தில் எளிதாக ரன்கள் வரவில்லை என்றால் அதற்கேற்றார் போன்று எவ்வாறு அட்ஜஸ்ட் செய்து விளையாட வேண்டும் என்பதை அவர் காண்பித்துள்ளார் என்றும் ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



