
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 – 2023 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக 105 போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்கள் அடித்துள்ளார். 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக 2 டெஸ்ட் தொடர்களை வென்று சரித்திரம் படைக்க அவர் முக்கிய பங்காற்றினார்.
களத்தில் நங்கூரமாக பேட்டிங் செய்து அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை கலைப்படயை வைக்கும் ஸ்டைலைக் கொண்ட அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அப்படிப்பட்ட புஜாரா 37 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 2016 – 2021 விராட் கோலி தலைமையில் இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலித்தது. அந்த காலங்களில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்சி செய்ய புஜாரா முக்கிய பங்காற்றியதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “புஜாரா உண்மையான போராளி”
“என்னுடைய பயிற்சியாளர் காலத்தில் இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக தொடர்ந்து 5 வருடங்கள் இருந்ததற்கும், ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்றதற்கும் அவர் முக்கிய கருவியாக இருந்தார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவருடைய ஆட்டம் அற்புதமானது. வெல்டன் புஜ்ஜி. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறினார்.
அதே போல முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “மற்ற அனைத்தையும் விட இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய புஜாரா பழைய ஸ்கூல் கிரிக்கெட்டர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட்டுகாக தன்னுடைய உடலில் முடிவற்ற அடிகளை வாங்கிய அவர் எப்போதும் பின்னங்கால் வைத்ததில்லை”
இதையும் படிங்க: 276 ரன்ஸ் 9 முறை.. மோசமான தோல்வியை சந்தித்த தெ.ஆ.. ஆனால் ஆஸியை வீழ்த்துவத்தில் உலக சாதனை
“இந்திய கிரிக்கெட் அவருடைய அனுபவத்தைப் பயன்படுத்தி இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்திய கிரிக்கெட் எதற்கும், அனைத்துக்கும் மேலாக இருத்தல் வேண்டும். தலை வணங்குகிறேன் புஜாரா, நீங்கள் இந்தியாவை பெருமைடைய வைத்துள்ளீர்கள்” என்று பாராட்டினார். இதை அடுத்து புஜாரா வர்ணனையாளராக கிரிக்கெட்டில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.