
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தடரின் நான்காவது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. முன்னதாக மூன்றாவது போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர்.
அதனால் ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவுக்கு ரவீந்திர ஜடேஜா டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து 61* ரன்கள் அடித்து வெற்றிக்காக போராடினார். இருப்பினும் அதிர்ஷ்டமின்மையால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோல்வியைச் சந்தித்தது. அதனால் ரவீந்திர ஜடேஜா தம்முடைய உயிருக்கு நிகராக முழுமூச்சை கொடுத்து போராடிய போராட்டம் வீணானது.
சொல்லப்போனால் 2019 உலகக் கோப்பையில் இதே இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் இந்தியா ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது தோனியுடன் சேர்ந்து போராடிய ஜடேஜா வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய நேரத்தில் விக்கெட்டை இழந்தார். கடைசியில் தோனியும் ரன் அவுட்டானது இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத தோல்வியைப் பரிசளித்தது.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் கொண்டிருக்கும் தன்னம்பிக்கையில் 40% நம்பிக்கையைக் கொண்டிருந்தால் கூட ரவீந்திர ஜடேஜா இந்நேரம் உலகின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்வார் என்று ரவி சாஸ்திரி ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “நிதிஷ் – ஜடேஜா ஆகியோர் விளையாடிய போது ஒருவர் வெற்றிக்காக அதிரடியாக விளையாடியிருக்க வேண்டுமென்று நான் நினைத்தேன்”
“ஏனெனில் ஃபீல்டர்கள் வெளியே இருந்தார்கள். பந்து கொஞ்சம் கடினமாக இருந்தது. அது கொஞ்சம் மென்மையானதும் ஒரு பந்தில் உங்களுடைய பெயர் எழுதியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே ஏதேனும் ஒரு சமயத்தில் அவர்கள் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இலக்கு 40 ரன்கள் வந்த பின் மெதுவாக விளையாடியிருக்கலாம். ஸ்டோக்ஸின் நம்பிக்கையில் 40% ஜடேஜாவிடம் இருந்தால் கூட அவர் உங்களுக்கு நிறையப் போட்டிகளை வென்று கொடுப்பார்”
இதையும் படிங்க: 15/5 டூ 125க்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை ஆட்டிப்பார்த்த வங்கதேசம்.. 10 வருடம் கழித்து மாபெரும் சாதனை வெற்றி
“ஏனெனில் அவருடைய திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் அவர் தைரியமாக சென்று பொறுப்பேற்க வேண்டும். ஒருவேளை அவர் தன்னை நம்பி பொறுப்பேற்றால் அவரால் சாதிக்க முடியும். இத்தனைக்கும் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 3 முச்சதங்கள் அடித்துள்ளார். இருந்தும் இந்தளவை தொடுவதற்கே அவருக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. 3 முச்சதங்கள் அடித்திருந்தும் தன்னிடமுள்ள பேட்டிங் திறமையை உணர அவருக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது” என்று கூறியுள்ளார்.