
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் மூன்றாவது போட்டியின் முடிவில் இந்திய அணிக்காக விளையாடி வந்த நம்பிக்கையை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010 முதல் விளையாடி வந்த அவர் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வெளிநாடுகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் ஓய்வு பெற்றார். அவருடைய ஓய்வு 2014 ஆஸ்திரேலிய தொடரில் இதே போல 3வது போட்டியின் முடிவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடைபெற்ற தோனியை பலருக்கும் நினைவுபடுத்தியது.
இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் கௌரவ சாதனை கிடைத்தும் அதை தோனி வேண்டாமென முடிவெடுத்ததாக அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அந்த முடிவை திடீரென தோனி எடுத்தது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி காத்திருக்கவில்லை. மெல்போர்ன் மைதானத்தில் போட்டியை டிரா செய்த பின் பயிற்சியாளராக இருந்த போது என்னிடம் வந்த அவர் ரவி 5 நிமிடங்கள் நமது வீரர்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார்”
“அதற்கு போட்டி டிரா செய்ததற்காக இந்திய வீரர்களுக்கு தோனி பாராட்டு தெரிவிப்பார் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்திய வீரர்களிடம் சென்ற தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெறுவதாக சொன்னார். அப்போது இன்னும் ஒரு போட்டி மீதம் இருப்பதால் அதில் விளையாடுங்கள் என்று சொன்னேன். ஆனால் வெறும் 5 நிமிடத்தில் எந்த வெறித்தனமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எங்களிடம் ஓய்வை அறிவித்த அவர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்”
“அடுத்த போட்டியில் இல்லாமல் போனாலும் எனது ஆதரவு இந்திய அணிக்கு உண்டு என்று தோனி சொன்னார். இத்தனைக்கும் அதற்கடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக செயல்பட வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் ஐபிஎல் உட்பட நிறைய போட்டிகள் இருப்பதால் தோனி அப்படி ஓய்வை அறிவித்திருக்கலாம்”
இதையும் படிங்க: 2 வாரத்தில் முடிஞ்சதா எழுதாதீங்க.. அது தெரியாம 9000 அடிச்சுருக்க முடியாது.. எம்சிஜியில் கோலி அசத்துவாரு.. கிப்ஸ் ஆதரவு
“அது பற்றி யாரிடமும் அவர் சொல்லவில்லை. 94 – 95 போட்டிகளில் விளையாடியிருந்த அவர் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்திற்கு 100வது டெஸ்ட் போட்டியை தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் விளையாடியிருக்க முடியும். அவருடைய 100வது போட்டியை கொண்டாட மொத்த நகரமும் தயாராக இருந்திருக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடைபெற்ற நான் தற்போது எனது பையை கட்ட வேண்டும் என்று தோனி சொன்னார்” எனக் கூறினார்.