ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று செய்திகள் காணப்படுகின்றன. அது போன்ற சூழ்நிலையில் அவருக்கு பதிலாக துவக்க வீரராக கே.எல் ராகுல் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக கௌதம் கம்பீர் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் வேண்டாம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக சுப்மன் கில் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் 2021 காபா டெஸ்ட் போட்டியில் அவர் துவக்க வீரராக விளையாடி 90 ரன்கள் குவித்து இந்தியாவின் சரித்திர வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
ரோஹித்துக்கு பதில்:
எனவே அதே போன்ற முடிவை இம்முறையும் இந்தியா எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது தேர்வாளர்களுக்கு மிகவும் கடினமான தேர்வாக இருக்கும். அங்கே நீங்கள் சுப்மன் கில்லை மேலே விளையாட அனுப்பலாம். ஏனெனில் ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவில் துவக்க வீரராக விளையாடியுள்ளார். இல்லையெனில் நீங்கள் வேறு வீரரை களமிறக்க வேண்டும்”
“அபிமன்யு ஈஸ்வரன் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடவில்லை. இருப்பினும் அவரும் ராகுலும் வலைப்பயிற்சியில் எவ்வாறு பேட்டிங் செய்கிறார்கள் என்பது முக்கியம். சுப்மன் கில் நமக்கு நல்ல தேர்வாக இருப்பார். பயிற்சியாளராக நான் எப்போதும் வீரர்களின் ஃபுட் ஒர்க்கை பார்ப்பேன். சில நேரங்களில் ரன்கள் முக்கியமல்ல. ஆனால் உங்களுடைய வீரரின் கால்கள் நன்றாக நகர்ந்தால் சூழ்நிலையை புரிந்து விளையாடுகிறார் என்பது அர்த்தம்”
சுப்மன் கில் தேர்வு:
“வெளிநாடுகளில் விளையாடும் போது இது போன்ற விஷயங்களை கவனித்து நீங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலான அணிகள் ஒரு சில விஷயங்களை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கப்படும். அல்லது உங்களுடைய தைரியமான உள்ளுணர்வை பின்பற்றி அணியை தேர்ந்தெடுப்பீர்கள். என்னைப் பொறுத்த வரை வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதைப் பார்ப்பேன்”
இதையும் படிங்க: 283 ரன்ஸ்.. 23 சிக்ஸ்.. தெ.ஆ அணியை சூறையாடிய சாம்சன் – வர்மா.. இந்தியா இரட்டை உலக சாதனை
“ஏனெனில் அவர்கள் நல்ல விதத்தில் இருப்பது முக்கியம்” என்று கூறினார். அவர் கூறுவது போல கேஎல் ராகுல் தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கிறார். எனவே சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடுவது நல்ல தேர்வாக இருக்கும். சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அவரும் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.



