IND vs AUS : பேட்டிங், பவுலிங்கை விடுங்க, இதுல சொதப்பும் உங்களுக்கு டி20 உ.கோ கிடைக்காது – இந்தியாவை விளாசும் சாஸ்திரி

Shastri
- Advertisement -

மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சிறப்பாக செயல்பட்டு 208/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிரடியாக 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 46 (25) ரன்களும் எடுக்க கடைசியில் பட்டைய கிளப்பிய ஹர்திக் பாண்டியா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 71* (30) ரன்கள் குவித்து சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஆரோன் பின்ச் 22 (13) ஸ்டீவ் ஸ்மித் 35 (24), கிளென் மேக்ஸ்வெல் 1, ஜோஸ் இங்கிலிஷ் 17 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) ரன்களை விளாசி அவுட்டானார்.

அதை வீணடிக்காத மேத்யூ வேட் கடைசியில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 45* (21) ரன்கள் குவித்து சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவரில் 211/6 ரன்களை எடுத்து எளிதாக வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதும் வலுவான அணியாக திகழும் இந்தியா உலகின் நம்பர்-1 டி20 அணியாக இருந்தும் பேட்டிங்கில் 208 ரன்களை எடுத்தும் பந்து வீச்சில் படுமோசமாக செயல்பட்டு வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

- Advertisement -

மோசமான பீல்டிங்:
209 என்ற பெரிய இலக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சீனியர் பவுலரான புவனேஸ்வர் குமாரும் காயத்திலிருந்து திரும்பிய ஹர்ஷல் படேலும் மோசமாக பந்து வீசியதற்கு ஈடாக 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த உமேஷ் யாதவ் வள்ளலாக பந்து வீசினார். மொத்தத்தில் அக்சர் பட்டேல் தவிர மற்ற அனைவரும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் பந்து வீசி ரன்களை வாரி வழங்கியது தோல்வியை பரிசளித்தது. அதை விட நேற்றைய போட்டியில் பனியின் தாக்கம் இல்லாத போதிலும் 3 முக்கிய கேட்ச்களை கோட்டை விட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

குறிப்பாக 61 ரன்களை விளாசி தோல்வியை கொடுத்த கேமரூன் கிரீன் 42 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை அக்சர் பட்டேல் பிடிக்காமல் விட்டார். அடுத்த ஓவரிலேயே கேஎல் ராகுலும் அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார். அதைவிட 45* ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்த மேத்யூ வேட் வெறும் 1 ரன்னில் இருந்த போது பந்து வீசிய தம்மிடமே கொடுத்த கேட்ச்சை ஹர்ஷல் படேல் நழுவ விட்டார். சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட சமீப காலங்களாகவே இப்படி பெரும்பாலான முக்கிய போட்டிகளில் கேட்ச்சை கோட்டை விடும் இந்தியா வெற்றியையும் கோட்டை விடுவது வாடிக்கையாகி விட்டது.

- Advertisement -

விளாசும் சாஸ்திரி:
ஆனால் அனைத்துப் போட்டிகளிலும் அனைத்து வீரர்களாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட முடியாது என்றாலும் சிறப்பாக பீல்டிங் செய்து கேட்ச்களை பிடிப்பது அனைத்து வீரர்களின் அடிப்படையான கடமை என்று முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும், கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ் என்று வல்லுநர்களும் கூறுவார்கள். அது தெரிந்தும் தொடர்ந்து அந்த துறையில் முன்னேறாமல் சொதப்பி வரும் இந்தியா உலகக்கோப்பையை வெல்வது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

இது பற்றி நேற்றைய போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த பல வருடங்களில் விளையாடிய டாப் இந்திய அணிகளை நீங்கள் பார்க்கும் போது அதில் அனுபவமும் இளமையும் இருக்கும். ஆனால் இந்த அணியில் இளமை இல்லையென்பதால் பீல்டிங் சுமாராக உள்ளதாக நான் கருதுகிறேன். கடந்த 4 – 5 வருடங்களில் இந்திய அணி பீல்டிங் துறையில் சிறப்பாக செயல்பட்டதாக எனக்கு தோன்றவில்லை”

“அது அவர்களுக்கு பெரிய தொடர்களில் பாதிப்பை கொடுக்கிறது. அதனால் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் 15 – 20 ரன்களை அதிகப்படியாக எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் உங்களது பீல்டிங்கின் திறமை எங்கே? உங்களிடம் ஜடேஜாவும் இல்லை. உங்களுடைய துருப்புச்சீட்டு எங்கே? எனவே இன்றைய நாளில் இந்தியாவின் சுமாரான பீல்டிங் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதாவது பீல்டிங் படுமோசமாக இருந்தது. ஆனால் பெரிய தொடர்களில் பெரிய அணிகளை நீங்கள் வீழ்த்த வேண்டுமெனில் முதலில் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும்” என்று கூறினார்.

Advertisement