இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது. மேலும் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான அணியை இப்போதே உருவாக்க துவங்கியுள்ளார்.
அதனால் இந்தத் தொடரில் யுஸ்வேந்திர சஹால் போன்ற சில வீரர்களை அவர் கழற்றி விட்டுள்ளார். அதே போல 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவும் இலங்கை டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய் ஆகியோர் ஸ்பின்னர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரசித் கான் மாதிரி:
இந்நிலையில் இந்திய அணியில் 23 வயதாகும் இளம் வீரர் ரவி பிஸ்னோய் ஆப்கானிஸ்தானின் ரசித் கான் போல செயல்படுவதாக முன்னாள் வீரர் வேங்கடபதி ராஜு பாராட்டியுள்ளார். குறிப்பாக ரசித் கான் போல துல்லியமான கூக்லி பந்துகளை அதிகமாக வீசும் பிஸ்னோய் சிறந்த ஃபீல்டராக செயல்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் ராஜு பேசியது பின்வருமாறு.
“நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது தொடர்ந்து வாய்ப்புகளை பெற வேண்டும். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் மிகவும் முக்கியமான வீரர்கள். அந்த வகையில் சஹால் நீண்ட காலமாக அசத்தி வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக தற்போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனாலயே அற்புதமாக ஃபீல்டிங் செய்யக்கூடிய ரவி பிஸ்னோய் தற்போது நம்மிடம் உள்ளார்”
“மிகவும் இளம் வீரராக இருப்பது அவருக்கு களத்தில் எக்ஸ்ட்ரா சாதகத்தை கொடுக்கிறது. வித்தியாசமான பவுலரான அவர் பந்து வீசும் போது வித்தியாசமான வெரைட்டி கிடைக்கிறது. அவர் ரசித் கான் போல தனது கூக்லிகளை அதிகமாக சார்ந்துள்ளார். தற்போது அவர் அதிகமான தன்னம்பிக்கையும் கொண்டுள்ளார். எனவே அடுத்த டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு முடிந்த வரை அவர் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அம்பயர் ரிச்சர்ட்டை நேரில் பாத்து 2023 உ.கோ ஃபைனலில் ஏன் அவுட் கொடுக்கலன்னு கேட்பேன்.. பும்ரா ஆதங்கம்
முன்னதாக 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றிய ரவி பிஸ்னோய் ஐபிஎல் தொடரிலும் அசத்தினார். அதனால் இந்தியாவுக்காக தேர்வான அவர் இதுவரை 29 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 42* விக்கெட்களை எடுத்துள்ளார். அந்த வகையில் இந்திய அணியில் அவர் தன்னை வருங்கால ஸ்பின்னராக அடையாளப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



