இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வென்றது. ஆனால் 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
அப்போட்டியில் வென்று 2 – 1* (3) என்ற கணக்கில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என்றே சொல்லலாம். ஆனால் அதற்காக நிலையான இடத்தைக் கொடுக்காத அவர் சுந்தரை விரும்பிய வகையில் பயன்படுத்தி வருவது இந்திய அணிக்கு பின்னடைவையே கொடுக்கிறது.
சுந்தரை குழப்பாத்திங்க:
எடுத்துக்காட்டாக தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவரை 3வது இடத்தில் களமிறக்கிய கம்பீர் அடுத்தப் போட்டியில் 8வது இடத்தில் விளையாட வைத்தார். அதே போல பந்து வீச்சிலும் அவருக்கு நிறைய ஓவர்கள் வீசும் வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. இத்தனைக்கும் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அந்த வரிசையில் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வாஷிங்டன் சுந்தருக்கு முழுமையாக பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் 2 போட்டிகளில் சேர்த்து அவர் 7 ஓவர்கள் மட்டுமே வீசினார். இந்நிலையில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு முதலில் முழுமையாக பந்து வீசும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அஸ்வின் கருத்து:
ஆனால் அதைச் செய்யாத இந்திய அணி நிர்வாகம் அவரை குழப்பம் வகையில் பயன்படுத்துவதாக அஸ்வின் விமர்சித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “நீங்கள் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்க முடிவெடுத்து விட்டால், அவரை பேட்டிங் செய்யக்கூடிய பவுலராக நடத்த வேண்டும். நீங்கள் அவருக்கு முழுமையாக ஓவர்களை வீசும் வாய்ப்பை வழங்க வேண்டும்”
இதையும் படிங்க: ஒரே நாளில் 378 ரன்ஸ்.. பகலிரவு டெஸ்டில் ஆஸி 8 வருட உலக சாதனை ஸ்கோர்.. இங்கிலாந்துக்கு பதிலடி ஆட்டம்
“தொடர்ந்து பந்து வீசினால் மட்டுமே நாம் பேட்டிங் செய்யக்கூடிய பவுலர் என்ற மனநிலையை அவர் பெறுவார். ஆனால் அவருக்கு பேட்டிங்கில் முழுமையான வாய்ப்பைக் கொடுக்கும் நீங்கள் பந்து வீச்சில் சில ஓவர்கள் மட்டுமே கொடுத்தால் தன்னைத்தானே தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். எனவே தன்னுடைய வேலை என்ன என்பது பற்றி அவரை தேட விடாதீர்கள். இந்திய அணி நிர்வாகம் அவருக்கு தன்னுடைய வேலை பற்றிய முறையான தெளிவைக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.



