
ஆசியக் கோப்பை 2025 கோப்பையை பாகிஸ்தானை 3முறை தோற்கடித்து இந்தியா வென்று சாதனை படைத்தது. முன்னதாக அந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் நிறைய சர்ச்சைகள் உண்டானது. முதலில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதனால் லீக் சுற்று போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இந்திய அணி வெளியேறியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
அடுத்து நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் அரை சதத்தை அடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் துப்பாக்கியால் பேட்டை வைத்து இந்தியாவை சுடுவது போல் கொண்டாடி கிண்டலடித்தார். அதே போல 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான கருத்தை ஹரிஷ் ரவூப் சைகையால் செய்து காட்டிக் கிண்டலடித்தார். இருப்பினும் களத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானை தொடர்ச்சியாக தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.
அதனால் இனிமேலும் பாகிஸ்தானை தங்களுடைய போட்டியாளர் அல்லது எதிரி என்று சொல்லாதீர்கள் என இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார். ஏனெனில் 7 – 7, 7 – 8 என சமநிலையில் போட்டியை கொடுக்கும் அணிகளைத் தான் எதிரி என்று சொல்ல முடியும் என்றும் சூரியகுமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எல்லையில் பதற்றம் நிலவும் வரை இந்தியாவுக்கு பாகிஸ்தான் தான் எதிரி என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் ரசித் லதீப் தெரிவித்துள்ளார்.
களத்தில் சுமாராக விளையாடி தோற்றாலும் இந்திய அணிக்கு பாகிஸ்தான் தான் எதிரி என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே போட்டி இருக்கும். அங்கே போர் நடக்கும் வரை இங்கே கிரிக்கெட்டில் போட்டியிருக்கும். அது எப்போதும் முடியாது. ஆம் இந்தியா தொடர்ச்சியாக வெல்வார்கள்”
“அது பிரச்சனை இல்லை. ஆனால் எப்போதுமே அங்கே போட்டியிருக்கும். அது தொடரும். உண்மையில் தொடர்ச்சியாக வெல்வது இந்தியாவுக்கு பெரிய பாதகம். ஏனெனில் இந்தியா இழப்பதற்கு அனைத்தும் இருக்கிறது. பாகிஸ்தான் இலக்க எதுவுமில்லை. ஒருவேளை பாகிஸ்தான் வென்றால் அது பிசிசிஐக்கு கடினமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்”
இதையும் படிங்க: 113/1 டூ 146க்கு அவுட்.. ஹரிஷ் ஃரவூபை ஓடவிட்டு மாஸ் பதிலடி கொடுத்த பும்ரா.. பாகிஸ்தானை தெறிக்க விட்ட குல்தீப்
“அத்துடன் சில வீரர்கள் இந்தத் தொடரை பற்றி குரல் எழுப்புவார்கள்” என்று கூறினார். இதிலிருந்து தோற்றாலும் பரவாயில்லை இந்தியாவுக்கு பாகிஸ்தான் தான் என்றும் எதிரி என்று ரஷீத் லத்தீப் சொல்கிறார் என்றே சொல்லலாம். இருப்பினும் தரத்தின் அடிப்படையில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய வெளிநாட்டு அணிகள் தான் எதிரியாக இருப்பதாக ரசிகர்கள் சொல்வது குறிப்பிடத்தக்கது.