பிளே ஆஃப் போட்டிகளெல்லாம் எனக்கு அல்வா மாதிரி ! குஜராத்தின் துருப்பு சீட்டாக வியக்க வைக்கும் நட்சத்திர பவுலர்

Rashid Khan
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 24ம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே புள்ளி பட்டியலில் அசத்தலாக செயல்பட்டு முதலிடம் பிடித்த அந்த அணி இந்த வெற்றியின் வாயிலாக இந்த வருடம் ஐபிஎல் தொடரின் பைனலுக்கு தனது முதல் வருடத்திலேயே நேரடியாக தகுதி பெற்று மீண்டும் சாதித்துக் காட்டியுள்ளது.

Miller 2

- Advertisement -

அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188/6 ரன்களை சேர்த்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 12 பவுண்டரி 2 சிக்சருடன் 89 (56) ரன்களும் கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (26) ரன்களும் தேவ்தூத் படிக்கல் 28 (20) ரன்களும் எடுத்தனர்.

குஜராத் மாஸ்:
அதை தொடர்ந்து 189 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு முதல் ஓவரிலேயே ரித்திமான் சஃகா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் அடுத்த ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். ஒரு கட்டத்தில் இந்த இருவருமே தலா 35 ரன்களில் ஆட்டமிழந்ததால் 85/3 என தடுமாறிய அந்த அணியை அடுத்ததாக களமிறங்கி நங்கூரமாக நின்று அதிரடி காட்டிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரியுடன் 40* (27) ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

Miller 1

அவருக்கு உறுதுணையாகவும் அவரைவிட அதிரடியாகவும் பேட்டிங் செய்த டேவிட் மில்லர் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 68* (38) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.3 ஓவரில் 191/3 ரன்கள் எடுத்த குஜராத் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிரஸித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்கவிட்டு 68 ரன்கள் குவித்து வெற்றியை உறுதிசெய்த மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

மிரட்டல் கான்:
மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்களை எடுத்த போதிலும் பந்துவீச்சில் சுமாராக செயல்பட்டு குறிப்பாக கடைசி நேரத்தில் 103* ரன்கள் வெற்றி பார்ட்னர்ஷிப் அமைத்த பாண்டியா – மில்லர் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுக்க தவறிய ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது. இருப்பினும் மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியை மற்றொரு வாய்ப்பில் ராஜஸ்தான் சந்திக்கிறது. முன்னதாக இந்த போட்டியில் குஜராத்தின் வெற்றிக்கு உலகின் நம்பர் ஒன் டி20 சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் ரசித் கான் மீண்டும் துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.

ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு எதிராக ஷமி, தயாள், அல்சாரி ஜோசப், சாய் கிசோர் என 4 ஓவர்கள் முழுமையாக வீசிய அனைத்து குஜராத் பவுலர்களும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வாரி வழங்கினர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் 1 பவுண்டரி கூட வழங்காமல் 3.75 என்ற கைதட்டி பாராட்டும் எக்கனாமியில் அற்புதமாக பந்து வீசினார். அதன் காரணமாகவே ராஜஸ்தான் 200 ரன்களை தொட முடியாமல் 188 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

பிளே ஆஃப் அல்வா:
சாதாரண லீக் போட்டிகளில் கூட துல்லியமாக பந்துவீச கூடிய இவரை கிறிஸ் கெய்ல், ஏபி டிவிலியர்ஸ் உட்பட உலகின் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் அதிரடியாக அடிப்பதற்கு சற்று யோசிப்பார்கள். அதன் காரணமாகவே பாண்டியாவுக்கு நிகராக 15 கோடி என்ற தொகைக்கு குஜராத் அணிக்காக விளையாடி வரும் அவர் இந்த வருடம் 15 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 6.74 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ளார். மேலும் மொத்தமாக 91 போட்டிகளில் 111* விக்கெட்டுக்களை 6.40 எடுத்துள்ள அவர் ஆல் டைம் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த எக்கனாமியில் பந்துவீசிய சிறந்த பவுலராக ஏற்கனவே வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

பொதுவாகவே உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் கூட நாக் – அவுட் போட்டிகளில் தடுமாறுவார்கள். ஆனால் நேற்றைய போட்டி உட்பட கடந்த 2017 முதல் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் இதுவரை 180 பந்துகளை வீசியுள்ள அவர் 8 விக்கெட்களை எடுத்து 143 ரன்களை மட்டும் கொடுத்து 4.92 என்ற வியக்க வைக்கும் எக்கனாமியில் பந்து வீசியுள்ளார். வரலாற்றில் வேறு எந்த ஒரு தரமான பவுலரும் பிளே ஆப் சுற்றில் இப்படி 5க்கும் குறைவான எக்கனாமியில் பந்து வீசியதே கிடையாது. வாஷிங்டன் சுந்தர் (5.00), முரளிதரன் (5.30), அமித் மிஸ்ரா (5.45) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். இதிலிருந்தே அழுத்தம் நிறைந்த பிளே ஆப் போட்டிகள் கூட எனக்கு அல்வா போன்றது என ரஷித் கான் நிரூபித்துள்ளார் என்றே கூறலாம்.

Advertisement