
வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பையில் நவம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற 38வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த ஆப்கானிஸ்தானை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொண்டது. அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 168/6 ரன்கள் சேர்த்தது. கேமரூன் கிரீன் 3, டேவிட் வார்னர் 25, ஸ்டீவ் ஸ்மித் 4, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 25, கேப்டன் மேத்யூ வேட் 6 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 54* (32) ரன்களை அடித்து ஓரளவு காப்பாற்றினார்.
அதை தொடர்ந்து 169 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (17) ரன்களும் குல்ஃபதின் நைப் 3 பவுண்டரி 2 சிஸ்கருடன் 39 (23) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தவிர மிடில் ஓவர்களில் இப்ராஹிம் ஜாட்ரான் 26, கேப்டன் முகமது நபி 1, நஜிபுல்லா ஜாட்ரான் 0 என முக்கிய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
குட்டையை குழப்பிய ரசித்:
அதனால் 14.3 ஓவரில் 103/6 என ஆப்கானிஸ்தான் தடுமாறியதால் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆஸ்திரேலியா குறைந்தது 60 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அப்போது களமிறங்கிய டெயில் எண்டரான ரசித் கான் யாருமே எதிர்பாராத வகையில் வகையில் காட்டுத்தனமாக மைதானத்தின் நாலாபுறங்களிலும் ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கினார். ஆனதாகட்டும் பார்த்துக் கொள்வோம் என்று வெறித்தனத்தை காட்டிய அவரால் வெற்றியை நெருங்கிய ஆப்கானிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.
அதில் முடிந்தளவுக்கு போராடிய அவர் 1 ஒய்ட்+விக்கெட், 0, 4, 0, 6, 2, 4 என 16 ரன்கள் குவித்த போதிலும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதனால் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 164/7 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு துளியளவு கூட பயன் கிடைக்காமல் போனது. ஏனெனில் இங்கிலாந்தை விட குறைவாக ரன் ரேட்டை கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு அதை உயர்த்துவதற்காக இப்போட்டியில் குறைந்தது 50 – 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி தேவைப்பட்டது.
அது ஒரு கட்டத்தில் சாத்தியமாக இருந்த போதிலும் கடைசி நேரத்தில் குட்டையை குழப்பியது போல் ரஷீத் தான் உள்ளே புகுந்ததால் ரன்ரேட் உதவியுடன் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியா மொத்தமாக கோட்டை விட்டது. அதனால் நவம்பர் 5ஆம் தேதியன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தை இலங்கை தோற்கடித்தால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமான சூழ்நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.
ஆனால் அதில் இங்கிலாந்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் ஆஸ்திரேலியாவின் கனவு கிட்டத்தட்ட முடிந்து போய்விட்டது என்று வெளிப்படையாக சொல்லலாம். அப்படி ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்தாலும் தனது நாட்டுக்காக மன உறுதியுடன் போராடிய ரஷீத் கான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை (48*) பதிவு செய்து சாதனை படைத்தார்.
அதை விட 8வது இடத்தில் களமிறங்கி 48* ரன்களை குவித்த அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் 8 அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரசித் கான் : 48*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*
2. கிப்ளின் டோரிகா : 46*, வங்கதேசத்துக்கு எதிராக, 2021
3. குல்பதின் நைப் : 42, இங்கிலாந்துக்கு எதிராக, 2012
4. ஏஞ்சலோ மேத்யூஸ் : 35*, பாகிஸ்தானுக்கு எதிராக, 2009