
இந்திய கிரிக்கெட் அணியில் எதற்கும் அஞ்சாமல் அதிரடியான ஆக்ரோசத்துடன் விளையாடி எதிரணிகளை வீழ்த்த வேண்டும் என்ற அணுகுமுறையை சௌரவ் கங்குலி கொண்டு வந்தார் என்றால் மிகையாகாது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 2002 நாட்வெஸ்ட் முத்தரப்பு கோப்பையை சொல்லலாம். அந்தத் தொடருக்கு முன்பாக இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்து வீழ்த்தியது.
குறிப்பாக மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் தன்னுடைய சட்டையை கழற்றி சுழற்றி கொண்டாடினார். அந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு கோப்பையில் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 325 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதைத் துரத்திய இந்தியாவுக்கு கங்குலி – சேவாக் நல்ல துவக்கத்தை கொடுத்தும் சச்சின் உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 146-5 என இந்தியா திணறியது. அப்போது யுவராஜ் – ஃகைப் ஜோடி சேர்ந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். இறுதியில் கைப் இந்தியாவை வெற்றி பெற வைத்த போது லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் கங்குலி தன்னுடைய சட்டையை கழற்றி சுழற்றி பிளின்டாப் மற்றும் இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் மாஸ் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் போது மொத்த அணியும் சேர்ந்து சட்டையை கழற்றி சுழற்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்று கங்குலி சொன்னதாக அப்போதைய மேனேஜர் மற்றும் இப்போதைய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திப்பது போல் இருந்தோம்”
“அப்போது எனது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நான் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். 325 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்த போது பதற்றத்துடன் கங்குலியிடம் ஸ்கோர் பற்றி கேட்டேன். அதற்கு சார் முதலில் எங்களை களத்திற்கு சென்று விளையாட விடுங்கள் என்று சொன்ன கங்குலி முழு தன்னம்பிக்கையுடன் இருந்தார்”
இதையும் படிங்க: கடந்த 10 வருஷத்துல இப்படி ஒரு ஆட்டத்தை நான் பார்த்ததில்லை.. 3 இந்திய வீரர்களை பாராட்டிய – அஷ்வின்
“இறுதியில் வெற்றி தருணம் வந்த போது மொத்த அணியும் சட்டையை கழற்றி சுழற்றி கொண்டாடுவோம் என்று கங்குலி சொன்னார். ஏனெனில் மும்பையில் ஃபிளின்டாப் அவ்வாறு கொண்டாடினார். ஆனால் இது ஜென்டில்மேன் விளையாட்டு என்பதால் மொத்த அணியும் அவ்வாறு செய்வது நன்றாக இருக்காது. எனவே அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சச்சின் என்னிடம் சொன்னார். அதனால் நீங்கள் விரும்பினால் அவ்வாறு செய்து கொள்ளுங்கள் என்று கங்குலியிடம் சொன்னேன். அதை கங்குலி செய்தது வரலாற்று புகைப்படமாக மாறியது. அவர் தான் இந்திய அணியில் ஆக்ரோசத்தைக் கொண்டு வந்த முதல் கேப்டன்” என்று கூறினார்.