
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் இன்று ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. மே 31-ஆம் தேதியான இன்று அகமதாபாத் நகரில் இந்த போட்டியில் நடைபெற இருப்பதால் இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இவ்வேளையில் இந்த மாபெரும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இந்திய டி20 அணித்தேர்வு பற்றி யோசிக்க போவதில்லை. இந்திய அணியின் கேப்டனாகவும் என்னை பார்க்கவில்லை. எந்தவொரு கேப்டனுக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அந்த வகையில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முடிவுடன் செயல்பட்டு வருகிறேன்.
முன்பெல்லாம் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை மட்டுமே அணி அதிகம் நம்பியிருந்தது. ஆனால் தற்போது அனைத்து வீரர்களுமே தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள். அதன் காரணமாகவே இந்த சீசனில் எங்களது அணியில் 8 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ளனர்.
இதையும் படிங்க : இந்தாண்டு ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி இதுதான் – ரவிச்சந்திரன் அஷ்வின் உறுதி
நாங்கள் வெறுமனே பிளே ஆப் சுற்றிக்கு வந்து இறுதிப் போட்டிக்கு வரவில்லை. கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் தான் களமிறங்கியுள்ளோம். எங்கள் அனைவரிடமும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி இருக்கிறது. இதன் காரணமாக நிச்சயம் இந்த போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுவோம் என்று ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.