மழை வந்து காப்பாத்திடுச்சு, அடுத்த மேட்ச்ல இருந்து இந்தியா தோற்கணும்னு வேண்டுகிறேன் – முன்னாள் பாக் வீரர் ஓப்பன்டாக்

VIrat Kohli IND vs PAK.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அசத்தலாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நவம்பர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 35வது லீக் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்கடித்தது. அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 184/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 50 (32) ரன்களும் விராட் கோலி 64* (44) ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து 185 ரன்களை சேசிங் செய்த வங்கதேசத்துக்கு பவர் பிளே ஓவர்களில் இந்திய பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கிய லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரை சதமடித்தார்.

அதனால் 7 ஓவர்களில் 66/0 என்ற அதிரடியான தொடக்கத்தை அந்த அணி பெற்ற போது மழை வந்தது. மேலும் டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்தியாவை விட 17 ரன்கள் வங்கதேசம் கூடுதலாக எடுத்திருந்ததால் தோல்வி உறுதியென்று இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இருப்பினும் அதிர்ஷ்டமாக மழை நின்றதால் 16 ஓவரில் 151 ரன்கள் தேவை என்ற புதிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசத்துக்கு 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 60 (27) ரன்களில் மிரட்டிய லிட்டன் தாஸை தீயாய் செயல்பட்ட கேஎல் ராகுல் ரன் அவுட் செய்தார். அந்த திருப்பு முனையை பயன்படுத்திய இந்தியா அடுத்து வந்த கேப்டன் சாகிப் அல் ஹசன் உள்ளிட்ட முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது.

- Advertisement -

மழையால் தம்பிச்சுட்டீங்க:
இருப்பினும் கடைசி நேரத்தில் நுருள் ஹசன் 25* (14) ரன்களும் தஸ்கின் அஹமத் 12* (7) ரன்களும் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய வங்கதேசத்துக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கச்சிதமாக செயல்பட்ட அர்ஷிதீப் சிங் 14 ரன்கள் மட்டும் கொடுத்து இந்தியாவை திரில் வெற்றி பெற வைத்தார். அதனால் 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக இப்போட்டியில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்த அதே மழை இறுதியில் அதிர்ஷ்டமாக மாறியது. ஏனெனில் அந்தளவுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேட்டிங் செய்த லிட்டன் தாஸ் மழைக்கு பின் அவுட்டானதால் திருப்பு முனை ஏற்பட்டு இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆனால் என்னம்மோ கேஎல் ராகுல் படுத்துக்கொண்டு ரன் அவுட் செய்தது போல் மழையால் தோல்வியிலிருந்து தப்பி இந்தியா சிறந்த கம்பேக் கொடுத்து விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தனது ட்விட்டரில் இந்த வெற்றியைப் பற்றி பதிவிட்டுள்ளார். அதைவிட இந்த வெற்றிக்கு பின் அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா தோல்வியடையும் என்று நம்புவதாக போட்டி முடிந்த பின் தனது யூடியூப் பக்கத்தில் பகிரங்கமாக அவர் பேசியது பின்வருமாறு. “இப்போது முதல் இந்தியா தோற்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் தோற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே அவர்கள் உலகக் கோப்பை வெல்ல தகுதியானவர்களா என்று காலம் தான் பதில் சொல்லும்” என்று கூறினார்.

- Advertisement -

முன்னதாக ஏற்கனவே பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறினால் இந்தியா செமி பைனலுடன் வெளியேறும் என்று கூறியிருந்த அவர் தற்போது மீண்டும் அந்தக் கருத்தில் பின்வாங்காமல் பேசியுள்ளது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. மேலும் இப்போட்டி உட்பட இந்த உலக கோப்பையில் சக்கை போட்டு போடும் விராட் கோலியை பாராட்டிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பை அனைத்தும் விராட் கோலியை பொருத்தது. இன்று இந்தியா எடுத்த 184 ரன்கள் அவர் 64 ரன்கள் எடுத்தார். கடவுள் கொடுத்ததால் இது நடக்கிறது. கடந்த 3 வருடங்களில் தடுமாறிய அவர் இப்போது உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்கிறார்”

“இந்த உலக கோப்பை அவருக்காகவே விளையாடப்படுகிறது என்று நான் உறுதியாக சொல்வேன். இதே போல் வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக ரன்களைக் குவிப்பார்” என்று கூறினார். மேலும் விராட் கோலியின் அனுமதியின்றி அவரது அறைக்குள் சென்று ரசிகர் வீடியோ எடுத்த நிகழ்வு பற்றி அதிருப்தி தெரிவிக்கும் அவர் கிரிக்கெட் வீரர்களின் அந்தரங்க உரிமைகளுக்கு ரசிகர்கள் மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Advertisement