இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாலாவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் அதே மைதானத்தில் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான t20 இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அதில் முதல் முறையாக இந்திய அணிக்கு இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் திவாதியா ஆகியோர் இந்திய அணியில் விளையாட தேர்வாகி இருந்தனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஆல்-ரவுண்டரான ராகுல் திவாதியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தினார் . இதன்காரணமாக இந்திய அணிக்காக முதன் முறை தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஃபிட்னஸ் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் இந்த பிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அணியில் விளையாட முடியும். அதாவது யோ-யோ டெஸ்டில் 17.1 சதவீதம் அல்லது 2 கிலோமீட்டர் தூரத்தை 8.3 நிமிடத்திற்குள் ஓடி முடிக்க வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும்.
இந்நிலையில் தற்போது ராகுல் திவாதியா இந்த 2 தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இருந்தாலும் அவருக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.