
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 20 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. முன்னதாக கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த கோப்பையின் தொடரின் கணிசமான போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
மறுபுறம் பேஸ்பால் போன்ற பல்வேறு விளையாட்டுகளை பிரபலமாகக் கொண்ட அமெரிக்காவில் போதுமான அளவு கிரிக்கெட் மைதானங்கள் இல்லை. அதனால் இந்த தொடருக்காக நியூயார்க், டாலஸ் போன்ற நகரங்களில் பிரத்தியேகமாக புதிய மைதானங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக ஜூன் 9ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் மைதானம் நியூயார்க் நகரில் 3 மாதத்தில் உருவாக்கப்பட்டது.
டிராவிட் எச்சரிக்கை:
மேலும் அங்குள்ள பிட்ச்கள் இயற்கையாக தயாரிக்கப்படாமல் தற்காலிகமாக செயற்கையாக பொருத்தப்பட்டுள்ளது. அது போக பயிற்சி எடுப்பதற்கான மைதானங்கள் மற்றும் வசதிகள் உயர்தரமாக இல்லை என்று சமீபத்தில் இந்திய அணி நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் பெயருக்கு தான் அமெரிக்கா ஆனால் அடிப்படை வசதிகள் அங்கே சரியில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நியூயார்க் மைதானம் மெதுவாக இருப்பதால் காயத்தை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக பயிற்சியளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். எனவே இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மைதானம் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. எனவே எங்கள் வீரர்கள் தொடை எலும்பு மற்றும் தசைகளில் கொஞ்சம் சிரமத்தை உணர்வார்கள் என்று நான் நினைக்கிறேன்”
“அதை சுற்றி வேலை செய்கிறோம் என்பதை நாம் உறுதியாக செய்ய வேண்டிய ஒரு பகுதியாகும். ஏனெனில் அது கொஞ்சம் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. சில நேரங்களில் அது மிருதுவாக இருக்கிறது. இருப்பினும் நாங்கள் அதற்கு உட்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன். வங்கதேசத்துக்கு எதிராக நாங்கள் அந்த மைதானத்தில் சராசரிக்கும் அதிகமான ஸ்கோர் எடுத்தோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இது தான் இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்களிடம் உள்ள வித்யாசம்.. அதுல நாம லீடிங்ல தான் இருக்கோம்.. யுவராஜ் சிங்
அந்த வகையில் லீக் சுற்று போட்டிகள் மட்டுமே அமெரிக்காவில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து முக்கியமான சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ளது. அங்கே காலம் காலமாக போட்டிகள் நடைபெற்று வருவதால் இப்படி மைதானங்கள் பற்றிய பிரச்சினைகள் இருக்காது என்று உறுதியாக நம்பலாம்.