இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு நாள் தொடரை இந்திய அணியும், டி20 தொடரை இலங்கை அணியும் கைப்பற்றின. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டிக்கு பிறகு கொரோனா தொற்று காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரரான க்ருனால் பாண்டியா பாதிக்கப்பட அவரோடு சேர்ந்து 8 முன்னணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக 9 வீரர்கள் அணியில் விளையாட முடியாத சூழ்நிலையில் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆறு பவுலர்களுடன் இறுதி 2 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அந்த இரண்டு போட்டியிலும் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு இந்த தொடர் படுமோசமாக அமைந்துள்ளது. இந்திய அணி இந்த டி20 தொடரை இழந்த பிறகு சஞ்சு சாம்சன் மீது பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் அவருக்கு கிடைக்கின்ற வாய்ப்பை எல்லாம் அவர் தவற விடுகிறார் என்றும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த இலங்கை தொடரில் சஞ்சு சாம்சன் செயல்பாடு குறித்து பேசிய ராகுல் டிராவிட் கூறுகையில் : இலங்கை மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிது அல்ல. ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் டி20 தொடரில் மைதானத்தில் இருந்த சவால் காரணமாக சிறப்பாக விளையாட முடியாமல் போனது. இந்த தொடரானது அவருக்கு நிச்சயம் அதிர்ப்தி அளித்திருக்கும் அது மட்டுமில்லாமல் இன்னும் சில வீரர்களுக்கும் இந்த தொடர் சற்று ஏமாற்றத்தை தந்து இருக்கும்.

இருந்தாலும் இளம் வீரர்களாக இருக்கும் நீங்கள் இது போன்ற சூழ்நிலைகள் எல்லாம் கடந்து வர வேண்டும். அதற்கு பொறுமை என்பது மிகவும் அவசியம் எனவே இந்த விடயத்தில் பொறுமையாக இருந்து மீண்டும் தங்களது திறமையை நிரூபிக்க இளம் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.



