ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்த் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 150க்கு அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது. ஆனால் பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்டி வீசியது.
பின்னர் 487-6 ரன்கள் குவித்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியாவை 238க்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100*, ராகுல் 77 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். இந்நிலையில் அந்தப் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிராவிட் பாராட்டு:
குறிப்பாக முதல் இன்னிங்சில் 150க்கு ஆல் அவுட்டான பின்பும் இந்தியா வென்றது அபாரமானது என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்கு 150க்கு ஆல் அவுட்டான பின் 2வது நாள் மாலையில் அபாரமாக பந்து வீசிய பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தது ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்ததாகவும் டிராவிட் தெரிவித்துள்ளார். இது பற்றி 2025 ஐபிஎல் ஏலத்தின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.
“டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 150க்கு ஆல் அவுட்டான உங்களுக்கு தேனீர் இடைவெளிக்கு அடுத்த பகுதி முக்கியமானது என்பது தெரியும். ஆஸ்திரேலியாவின் எஞ்சிய 7 விக்கட்டுகளையும் எடுத்த நாம் பின்னர் ரன்கள் குவித்து அடுத்த 2 நாட்கள் அற்புதமாக விளையாடினோம். இது ஒரு கச்சிதமான டெஸ்ட் போட்டி என்று நினைக்கிறேன். இது மிகவும் பெரிய தொடர்”
இந்தியா அசத்தல்:
“இந்த தொடரில் நம்முடைய அணிக்கும் பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஐபிஎல் ஏலத்தில் நான் இருந்தாலும் என்னுடைய மனதின் பாதி பகுதி இந்தியா விளையாடும் இந்த டெஸ்ட் தொடரில் தான் இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் போட்டியிலேயே இந்தியா பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியின் பதிவு செய்தது.
இதையும் படிங்க: 4 பேரும் அசத்திட்டாங்க.. பும்ரா தலைமையில் இது வெறும் வெற்றியல்ல.. இந்திய அணிக்கு சச்சின் பாராட்டு
அந்த வெற்றியாவது சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த ஒயிட்வாஸ் தோல்வியில் இருந்தும் இந்தியா மீண்டு வந்தது. இதை அடுத்து இரண்டாவது போட்டி பகல் இரவாக நடைபெற உள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கி வேண்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.



