இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அப்போட்டி ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பார்படாஸ் நகரில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏனெனில் கொஞ்சம் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இதுவரை இந்தியா தோல்வியை சந்தித்ததில்லை. அத்துடன் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, சூரியகுமார் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். எனவே இம்முறையும் ஆப்கானிஸ்தானின் சவாலை சமாளித்து இந்தியா வெல்லும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆபத்தான ஆப்கானிஸ்தான்:
இந்நிலையில் சமீப காலங்களில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஏனெனில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விட டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி என்று டிராவிட் தெரிவித்துள்ளார். அவர்களிடம் அனுபவமில்லை என்றாலும் உலகம் முழுவதிலும் நடைபெறும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் அசத்திய அனுபவமிருப்பதாக டிராவிட் கூறியுள்ளார்.
எனவே ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி சாதாரணமாக அணுகாது என்று தெரிவிக்கும் டிராவிட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதலில் நியூயார்க்கில் விளையாடிய 3 போட்டிகளும் நன்றாக அமைந்தது. அதை முடித்துக் கொண்டு கரீபியன் மண்ணுக்கு வந்துள்ளோம். மிகப்பெரிய வரலாறு கொண்ட இந்த மைதானத்தில் விளையாட உள்ள இந்தப் போட்டிக்காக ஆர்வத்துடன் முன்னோக்கியுள்ளோம்”
“இதற்காக நாங்கள் சில நாட்கள் நன்றாக பயிற்சி எடுத்தோம். நாங்கள் போதுமான ஓய்வை எடுத்து தயாராக உள்ளதாக உணர்கிறோம். டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி. இந்த உலகக் கோப்பையில் அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை காண்பித்துள்ளனர். அவர்களிடம் சர்வதேச அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய வீரர்கள் தொடர்ந்து டி20 லீக் தொடர்களில் விளையாடுகின்றனர்”
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் போட்டியில் மாற்றம் நிகழுமா? குல்தீப் இந்திய லெவனில் வருவாரா? ராகுல் டிராவிட் பதில்
“சொல்லப்போனால் எங்கள் வீரர்களை விட அவர்கள் அதிக டி20 தொடர்களில் விளையாடுகின்றனர். அவர்களுடைய முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். எனவே டி20 கிரிக்கெட்டில் அவர்களை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் சூப்பர் 8இல் விளையாடுவதற்கு தகுதியுடையவர்கள். எனவே சூப்பர் 8 விளையாடும் மற்ற அணிகளை போலவே நாங்கள் அவர்களையும் அணுகுவோம்” என்று கூறினார்.



