ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜாம்பவான் ராகுல் டிராவிட் வழங்கினார். கடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவரது தலைமையில் இந்தியா இருதரப்பு தொடர்களையும் 2023 ஆசிய கோப்பையையும் வென்றது. மற்றபடி 2023 உலகக் கோப்பை உட்பட எஞ்சிய முக்கியமான தொடர்களில் தோல்விகளையே சந்தித்தது.
இருப்பினும் மனம் தளராமல் போராடிய இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்றது. அதனால் ஒரு வீரராக வெல்லாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக வென்று ஜாம்பவான் ராகுல் டிராவிட் விடை பெற்றார். அதைத் தொடர்ந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் பயிற்சியாளர்:
மறுபுறம் கம்பீர் விலகிய கொல்கத்தா அணியும் ராஜஸ்தான் அணியும் ராகுல் டிராவிட்டை ஆலோசகராக நியமிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2012, 2013 ஐபிஎல் தொடர்களில் ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக டிராவிட் விளையாடினார்.
மேலும் 2014, 2015 வருடங்களில் ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் ஆலோசகராகவும் டிராவிட் செயல்பட்டுள்ளார். அந்த வகையில் ராஜஸ்தானுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது. அதனாலேயே கொல்கத்தாவை தாண்டி ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ஜாக் மற்றும் இயக்குனர் குமார் சங்ககாரா ஆகியோர் கேட்டதும் பயிற்சியாளர் பதவியில் செயல்பட ஒப்புக்கொண்டதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
பிடித்த ராஜஸ்தான்:
இது பற்றி ராகுல் டிராவிட் பேசியது பின்வருமாறு. “கடந்த காலங்களில் என்னுடைய வீடு என்றழைத்த ஐபிஎல் அணிக்கு மீண்டும் வந்துள்ளது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. உலகக் கோப்பைக்கு பின் மற்றொரு சவாலை எடுத்துக்கொள்ள இது சரியான நேரம் என்று நான் கருதுகிறேன். அதைச் செய்வதற்கு ராஜஸ்தான் எனக்கு சரியான இடமாகும். கடந்த சில வருடங்களாக மனோஜ், ஜேக், குமார் சங்ககாரா ஆகியோர் இந்த அணி வளர்வதில் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்”
இதையும் படிங்க: அண்ணன் சர்பராஸ் இந்த டெக்னிக் சொன்னாரு.. 181 ரன்கள் விளாசி சச்சினை முந்தியது பற்றி.. முஷீர் கான்
“எங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் வளங்களின் அடிப்படையில் இந்த அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது ஒரு உற்சாகமான வாய்ப்பாகும். அதை தொடங்குவதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் டி20 உலகக் கோப்பையை வென்ற அனுபவம் கொண்ட ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



