இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல கோடிகள் இதுவரை நிவாரண நிதியாக இந்திய அரசாங்கம் செலவழித்து வருவதால் தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை களைய ஒவ்வொரு மாநில அரசும் மக்களிடம் தானாக முன்வந்து நிதி உதவி வழங்கலாம் என்று கோரிக்கை வைத்தது.

மேலும் பிரதம மந்திரி மோடி அவர்களின் நிவாரண கணக்கில் பணம் செலுத்தலாம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்துறை உரிமையாளர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் என அனைவரும் தங்களது நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 லட்சம் (முதல்வர் நிவாரண நிதி 21, பிரதமர் நிவாரண நிதி 31) அளித்து பிரதமர் மற்றும் ரசிகர்களின் பாராட்டினை பெற்றார்.

மேலும் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், கங்குலி 50 லட்சம், கம்பீர் 50 லட்சம் என அவர் அவர்கள் தங்களது அளவிற்கு ஏற்ப பணத்தினை நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அஜிங்கியா ரஹானே மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக மகாராஷ்டிர முதலமைச்சர் நிவாரண நிதி அக்கவுண்டிற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில் : இந்த நிதியுதவி ‘‘என்னுடைய சிறிய பங்களிப்பு. கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது. இந்த கடினமான சூழ்நிலையில் என்னுடைய சிறந்த ஆதரவை கொடுப்பேன். வீ்ட்டில் தங்கியிருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பல பிரபலங்களும், விளையாட்டு வீரர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கூறிவரும் அறிவுரையின்படி மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்தாலும் ஒருசிலர் இன்னும் இதன் தீவிரத்தை அறியாமல் வெளியில் சுற்றிவருவதையும் பார்க்க முடிகிறது.



