ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று துவங்கி விளையாடி வருகிறது. இன்று காலை 8:30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்தால் மைதானம் சாதகமாக அமையும் என்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்திய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 180 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 74 ரன்களை குவித்தார். புஜாரா 43 ரன்களையும், ரஹானே 42 ரன்கள் குவித்தனர். இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விருத்திமான் சஹா 25 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையிலும், அஸ்வின் 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
நாளை இரண்டாம் நாள் இந்திய அணி பேட்டிங்கை தொடரும். இந்நிலையில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் ரஹானே செய்த சிறு தவறால் தனது விக்கெட்டை இழந்தார். இந்த வருடம் முழுவதுமே சர்வதேச போட்டியில் சதம் அடிக்காமல் இருந்த விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் நிச்சயம் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதன்படியே கோலியும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். சதத்தை நெருங்கிய வேளையில் கோலி 74 ரன்களில் இருந்த போது எதிர்முனையில் இருந்த ரஹானே லயன் வீசிய பந்தில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓட ஆசைப்பட்டு கோலியை அழைத்தார். ஆனால் பந்து நேராக பீல்டரின் கைகளுக்கு சென்றது. அப்படி இருந்தும் அவர் கோலியை ஓடி வருமாறு கூப்பிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தார்.
இதன் காரணமாக பாதி தூரம் ஓடிவந்த கோலி மீண்டும் கிரீஸ் திரும்ப முடியாமல் பரிதாபமாக ரன் அவுட் ஆகி ஆதங்கத்துடன் வெளியேறினார். இதனை கண்ட ரசிகர்கள் இணையத்தில் ரஹானேவை வறுத்தெடுத்து வருகின்றனர். கோலியின் அசத்தலான சதம் வரும் வேளையில் இப்படி ஒரு தவறை செய்து விட்டீர்களே ரஹானே என்று இணையத்தில் அனைவரும் வசை பாடி வருவது குறிப்பிடத்தக்கது.