ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முதல் நாளான இன்று இந்திய அணி சிறப்பாக பௌலிங் செய்து உள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

குறிப்பாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் நிகழ்த்திய இந்த விக்கெட் வேட்டைக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரகானே பார்க்கப்படுகிறார். ஏனெனில் சரியான நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றி மாற்றி பந்துவீச வைத்தார்.
அதுமட்டுமின்றி பீல்டர்களை சரியான இடத்தில் நிற்க வைப்பது எனத் துல்லியமாக ரகானே செய்த இந்தக் கேப்டன்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மேலும் இதனையும் தாண்டி இன்று ரசிகர்கள் மனதை கவரும் படி ஒரு செயலைச் செய்தார். அதாவது எப்போதுமே ஒரு வீரர் அறிமுகமாகும்போது தோனி மற்றும் கோலி ஆகியோர் வெற்றி கோப்பையை தான் அவர்கள் கையில் கொடுத்து கொண்டாட செய்வார்கள்.

ஆனால் ரகானே அவர்களுக்கெல்லாம் ஒருபடி முன்னே சென்று இன்று அறிமுகமான சிராஜ்ஜை தேநீர் இடைவேளையின் போது இந்திய அணியை பெவிலியிவன் நோக்கி தலைமை தாங்கி முன்நின்று அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதன்படி சிராஜ் தேநீர் இடைவேளையின்போது முன்னே நடந்து செல்ல பின்னால் இந்திய வீரர்கள் சென்றனர். இந்த போட்டியில் அறிமுகமான சிராஜ் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் முன்னரும் ரஹானே அவருக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமின்றி புதிய பந்தில் அவருக்கு ஓவரை வீச கொடுக்காமல் உணவு இடைவேளைக்கு பிறகு அவருக்கு ஓவரை வழங்கினார். இந்த போட்டியில் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக விளையாடிய சிராஜ் 2 விக்கெட்டை கைப்பற்றினார். குறிப்பாக சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் மற்றும் கிரீன் ஆகியோரது விக்கெட்டை சிராஜ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.



