முதல் முறையா பாக்குறேன்.. தோனிக்கான விசில் சத்தம் சிஎஸ்கே அணியால் மட்டும் கிடைக்கல.. ரவீந்திரா வியப்பு

Rachin Ravindra MS Dhoni CSK
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் பெங்களூருவை தோற்கடிதது சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ஜாம்பவான் எம்எஸ் தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை இளம் வீரர் கையில் ஒப்படைத்தார்.

அவருடைய தலைமையில் சிறப்பாக விளையாடிய சென்னை தொடர்ந்து 16வது வருடமாக தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் பெங்களூருவை 8வது போட்டியில் தோற்கடித்தது. முன்னதாக அந்த போட்டியில் காயமடைந்த டேவோன் கான்வேவுக்கு பதிலாக களமிறங்கிய இளம் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக 37 (15) ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ரச்சின் வியப்பு:
மேலும் சிஎஸ்கே அணிக்காக முதல் முறையாக போட்டியில் விளையாடிய அவர் “சேப்பாக்கம் ரசிகர்கள் கூட்டம் தான் தம்முடைய கேரியரில் பார்த்ததிலேயே மிகவும் சத்தமானது” என்றும் வியப்புடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் தோனியை தல என்று விசிலடித்து கொண்டாடுவதை முதல் முறையாக நேரில் பார்ப்பது வியப்பாக உள்ளதாக ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்ல இந்தியாவுக்காகவும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததாலேயே தோனிக்கு சென்னை மக்கள் இவ்வளவு ஆதரவை கொடுப்பதாகவும் ரவீந்திரா கூறியுள்ளார். இது பற்றி சிஎஸ்கே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “மஹி பாய் விளையாட வரும் போதெல்லாம் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுகின்றனர். சூப்பர் ரசிகர்களின் அந்த ஆதரவை பார்க்கும் அனுபவத்தை முதல் முறையாக நேரில் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்”

- Advertisement -

“அதை பார்ப்பது அழகாக இருக்கிறது. தோனி ஏதாவது செய்யும் போது ரசிகர்கள் கொடுக்கும் சத்தங்களும் விசில்களும் மிகவும் ஸ்பெஷலாகும். அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமல்லாமல் ஒரு இந்திய வீரராகவும் அவர் சாதித்ததற்காக கிடைத்த அங்கீகாரம் என்று நினைக்கிறேன். அதே போல களத்திலும் களத்திற்கு வெளியேயும் மக்களின் வாழ்க்கையிலும் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் உண்மையாக உத்வேகத்தை கொடுக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஸ்காட் ஸ்டைரிஸிடம் சிஎஸ்கே அணியை வைத்து பெட் கட்டிய ஏபிடி.. நேரலை வர்ணனையில் அரங்கேறிய சவால்

இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் மார்ச் 26ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது. கடந்த வருடம் ஃபைனலில் குஜராத்தை தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்றது. அதே போல இப்போட்டியிலும் விளையாடி குஜராத்தை தோற்கடித்து இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்புடன் சிஎஸ்கே அணி வீரர்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement