நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் வேகத்துக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் தப்பு கணக்கு போட்ட இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு
கேப்டன் டாம் லாதம் 15, வில் எங் 33 ரன்களில் அவுட்டானார்கள்.
நழுவும் வெற்றி:
இருப்பினும் மறுபுறம் அசத்திய துவக்க வீரர் டேவோன் கான்வே அரை சதமடித்து 91 ரன்கள் குவித்து அவுட்டானார். அதைத் தொடர்ந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி அசத்தினார். ஆனால் எதிர்ப்புறம் டேரில் மிட்சேல் 18, டாம் பிளண்டல் 5, கிளன் பிலிப்ஸ் 14, மாட் ஹென்றியை 8 ரன்களில் அவுட்டாக்கி இந்தியா போராடியது. ஆனாலும் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ரவீந்திரா அரை சதமடித்தார்.
நேரம் செல்ல செல்ல தம்முடைய தந்தை பிறந்த ஊரான பெங்களூருவில் இந்தியாவுக்கு தொடர்ந்து சவாலை கொடுத்த அவர் சதமடித்து அசத்தினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டிம் சவுதி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். சொல்லப்போனால் அஸ்வின், சிராஜ், ஜடேஜா வீசிய 78, 79, 80வது ஓவர்களில் திடீரென அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 18 பந்துகளில் 48 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
ரவீந்திரா சாதனை:
அதனால் மூன்றாவது நாள் உணவு இடைவெளியில் நியூசிலாந்து 345-7 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் ரச்சின் 104* (125), சௌதீ 49* (50) ரன்களுடன் உள்ளனர். இப்போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா குறைந்தபட்சம் 200 ரன்னுக்குள் நியூஸிலாந்தை ஆல் அவுட் செய்தால் மட்டுமே 2வது இன்னிங்ஸில் வெற்றிக்கு போராடக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முடியும்.
இதையும் படிங்க: 46க்கு ஆல் அவுட்டான இந்தியா.. 2001 மாதிரி இதை செஞ்சு கம்பேக் கொடுத்து ஜெய்ப்பாங்க.. ஆகாஷ் சோப்ரா
ஆனால் அதை இந்திய அணி செய்யாததால் நியூசிலாந்து இப்போதே 299 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் போராடினால் டிரா செய்யலாமே தவிர இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். முன்னதாக இப்போட்டியின் வாயிலாக சவாலான இந்தியாவில் 12 வருடங்கள் கழித்து டெஸ்ட் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். இதற்கு முன் கடைசியாக இதே பெங்களூரு மைதானத்தில் 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ராஸ் டெய்லர் 113 ரன்கள் அடித்திருந்தார்.



