- Advertisement -
உலகக் கோப்பை 2023

நியூஸிலாந்தின் புதிய நாயகனாக.. சச்சின், பேர்ஸ்டோவின் சாதனைகளை உடைத்த ரச்சின்.. 2 புதிய உலக சாதனை

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 9ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 41வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே லீக் சுற்றிலிருந்து வெளியேறிய இலங்கையை தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் நியூசிலாந்து களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு துவக்க வீரர் குசால் பெரேரா அதிரடியாக 51 (28), மஹீஸ் தீக்சனா 38* (91) ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

நியூசிலாந்தின் புதிய நாயகன்:
மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 172 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே 45 (42) ரன்களில் அவுட்டானார்.

அவருடன் மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (34) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த 42 ரன்களையும் சேர்த்து 2023 உலகக் கோப்பையில் அவர் 565 ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக 23 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தன்னுடைய இந்த முதல் உலகக்கோப்பையிலேயே அபாரமாக விளையாடி 565 ரன்களை அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2019 உலகக்கோப்பையில் ஜானி பேர்ஸ்டோ தன்னுடைய அறிமுகத் தொடரில் 532 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

அதை விட உலகக் கோப்பை வரலாற்றில் 23 வயதுக்குள் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 27 வருட சாதனையையும் உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1996 உலகக் கோப்பையில் சச்சின் தன்னுடைய 23 வயதுக்குள் 523 ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் நியூசிலாந்தின் புதிய நம்பிக்கை நாயகனாக ரச்சின் ரவீந்திரா உருவெடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இந்த நிலைமையில் சற்று முன் வரை நியூசிலாந்து 17 ஓவரில் 118/2 ரன்கள் எடுத்து வெற்றியை நோக்கி நெருங்கி வருகிறது.

- Advertisement -