
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்றது. அந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
அதே போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் தெரிவித்தார். அந்த சூழ்நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டு சூரியகுமாரை தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல சுப்மன் கில் இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆல் ஃபார்மட் பிளேயர்:
கடந்த சில வருடங்களாக சுப்மன் கில் 3 வவையான கிரிக்கெட்டிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டுள்ளார். அதனால் அவரை ஆல் ஃபார்மட் பிளேயராக பார்ப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் தெரிவித்தார். எனவே அவரது இந்தியாவின் வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காகவே தற்போது துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அகர்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சுப்மன் கில் வருங்காலத்தில் இந்திய அணியை தாங்கிப் பிடிக்கக்கூடிய ஆல் ஃபார்மட் பிளேயர் என முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார். எனவே 2027 உலகக் கோப்பைக்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான இந்திய அணியின் கேப்டனாகவும் சுப்மன் கில் இருப்பார் என்று ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“என்னைப் பொறுத்த வரை சுப்மன் கில் ஆல் ஃபார்மட் பிளேயர். தற்போதைய நிலைமையில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் துணை கேப்டனாக செயல்படுவார். அதே சமயம் 2027 உலகக் கோப்பை முடிந்த பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவரை இந்தியா தங்களுடைய கேப்டனாக பார்க்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: போட்டியில் தமிழக வீரரும் இருக்காரு.. விராட், ரோஹித் இடத்தை அந்த 2 பிளேயர்ஸ் நிரப்புவாங்க.. ஸ்ரீதர் பேட்டி
இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதே போல சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் அவர் கேப்டனாக சுயநலமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். அந்த சூழ்நிலையில் ரோஹித்துக்கு பின் சுப்மன் கில்லை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் வளர்க்க நினைப்பது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.