
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2024இல் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் 25 வருடங்கள் கழித்து இந்தியா தோற்றது. அதனால் இனிமேல் ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் இந்திய வீரர்கள் 15 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டுமென்ற பரிந்துரையை கேப்டன் சுப்மன் கில் பிசிசிஐக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சுப்மன் கில்லின் இந்த ஐடியா மிகவும் வரவேற்கத்தக்கது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். முறையாக தயாராகாமல் விளையாடியதாலே தற்போதைய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து முதல் 3 போட்டிகளில் தடுமாறி தோற்றதாக அஸ்வின் கூறியுள்ளார். அதே சமயம் 3 போட்டிகளில் விளையாடி பழகியதால் கடைசி 2 போட்டிகளில் இங்கிலாந்து அசத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் தொடருக்கு முன் 15 நாட்கள் முகாம் என்ற ஐடியா யாருடையதாக இருந்தாலும் அதை நான் விரும்புகிறேன். அது போன்ற முகாம் உங்களுக்கு குறைகளைக் கண்டறிய உதவும். தற்போதைய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் தயாராகும் முறை அவ்வளவு நன்றாக இல்லை. அதனாலேயே முதல் 3 போட்டிகளில் அவர்கள் தடுமாறினார்கள்”
“ஆனால் 3 போட்டிகளின் முடிவில் அவர்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்குப் பழகி நன்றாக விளையாடுகிறார்கள். நீங்கள் நிறைய தயாரானாலும் கூட டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. எனவே 15 நாட்கள் பயிற்சி முகாம் உங்களை டெஸ்ட் போட்டிகளுக்கான மனநிலைக்கு கொண்டு வரும். அந்த ஐடியாவை நான் உண்மையாகவே விரும்புகிறேன்”
“இருப்பினும் அதை தற்போதைய நெருக்கமான போட்டி அட்டவணைகள் நிறைந்த காலத்தில் உங்களால் செய்ய முடியுமா? உங்களிடம் நோக்கம் இருந்தால் முடியும். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கும். அந்த 2 வடிவத்துக்கும் உங்களை மாற்றுவது அவசியம். அதற்கு 15 நாட்கள் கொண்ட முகாம் அமைப்பது நல்ல வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன்”
இதையும் படிங்க: சச்சின் சாதனையை ஜோ ரூட் ஈஸியா உடைச்சு.. அந்த ஆஸி ஜாம்பவான் பெயரை எடுப்பாரு.. டேரன் லேமன்
“இந்திய கிரிக்கெட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. டி20 கிரிக்கெட்டில் விளையாடி விட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வரும் போது திட்டங்கள் மற்றும் மனதளவில் நீங்கள் மாற வேண்டும். அதற்கு பயிற்சி முகாம் கண்டிப்பாக உதவி செய்யும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்ததாக ஜூலை மாதம் இலங்கையில் 2 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.