இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் 2 – 1 (5) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்தொடரில் 5வது போட்டியை தவிர்த்து ஏனையப் போட்டிகளில் சுப்மன் கில் ஓப்பனிங்கில் அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறினார். கடந்த வருடம் அபிஷேக் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 3 சதங்கள் அடித்து அபாரமாக விளையாடினார்.
ஆனால் திடீரென சுப்மன் கில்லை தேர்வுக்குழு வருங்கால கேப்டனாக வளர்க்க விரும்புகிறது. எனவே சாம்சனை கழற்றி விட்ட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிதாக சுப்மன் கில்லை ஓப்பனிங்கில் களமிறக்கியுள்ளார். அந்த வாய்ப்பில் சுப்மன் கில் இதுவரை அபிஷேக் ஷர்மாவுக்கு ஈடு கொடுத்து விளையாட முடியாமல் தடுமாறுகிறார் என்றே சொல்லலாம்.
நெருப்புடன் நெருப்பாக:
இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி நெருப்புடன் நெருப்பாக இருக்க வேண்டுமெனில் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் விளையாடுவது அவசியம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதற்காக அடுத்த தென்னாபிரிக்க டி20 தொடரில் கில் கழற்றி விடப்பட்டு ஜெய்ஸ்வால் சோதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.
“டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு இடையே தொடர்பு இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் அந்த 2 ஃபார்மட்டையும் தனியாக வைத்திருக்க வேண்டும். தேவையான அனைத்தையும் செய்துள்ள ஜெய்ஸ்வால் அங்கீகரிக்கப்பட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ளார் என்ற காரணத்துக்காக மட்டும் அவர் டி20 அணியில் விளையாடக்கூடாது. ஏனெனில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சுமார் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியுள்ள அவரது பேட்டிங் சராசரி சிறப்பாக இருக்கிறது”
ஜெய்ஸ்வால் வேண்டும்:
“இந்தியாவில் ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு மிகவும் ஆக்ரோஷமான ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். எனவே நீங்கள் அதிரடியான வீரர்களை விரும்பினால் அவர்களை ஓப்பனிங்கில் அனுப்புங்கள். ஒருவேளை அணியின் சமநிலைக்காக நெருப்பு மற்றும் பனிக்கட்டி கலவை தேவைப்பட்டால் அபிஷேக் – கில் சரியானவர்களாக இருப்பார்கள்”
இதையும் படிங்க: சுதர்சன் இடத்தை கெடுக்காம.. துருவ் ஜுரேலை அவருக்கு பதிலாக விளையாட வைங்க.. அஸ்வின் பேட்டி
“சொல்லப்போனால் அந்தக் கலவையில் கூட சுப்மன் கில்லுக்கு சமமானவராக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார். உலகக்கோப்பை நெருங்குவதால் வரும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் நாம் வித்தியாசமான ஓப்பனிங் ஜோடியைப் பார்க்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். அத்தொடரில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்ற உணர்வு எனக்குத் தோன்றுகிறது. அதனால் மற்ற வீரர்களும் வாய்ப்பு பெறுவார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.



