இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக அசத்தி வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது தலைமையில் சொந்த மண்ணில் இந்தியா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
குறிப்பாக 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்ட இந்தியா கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒய்ட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென் ஆப்பிரிக்காப்பிடம் 25 வருடங்கள் கழித்து இந்தியா மண்ணைக் கவ்வியது. அந்தத் தோல்விக்கு சோதனை என்ற பெயரில் கௌதம் கம்பீர் செய்யும் தவறானத் தேர்வுகள், மாற்றங்கள் முக்கிய காரணமானது.
கல்லை எறியாதீங்க:
அதனால் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியை கம்பீர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அத்துடன் தம்மை விமர்சித்த ஸ்ரீகாந்த், டெல்லி ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஜிண்டால் ஆகியோரையும் கம்பீர் கடுமையாக தாக்கி பேசினார். அதனால் அவரைப் பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக தாக்கிப் பேசுகிறார்கள்.
இந்நிலையில் கௌதம் கம்பீரை விமர்சியுங்கள் ஆனால் அவருடைய கேரக்டரை கல்லால் அடிக்காதீர்கள் என்று ரசிகர்களை ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் அல்லவா? நான் உட்பட அனைவரும் விமர்சிக்க எப்போதும் ஏதேனும் காரணம் இருக்கும்”
அஸ்வின் கோரிக்கை:
“எடுத்துக்காட்டாக ரியான் பராக் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றிய விவாதம் காணப்படுகிறது. அந்த விவாதம் எப்போதும் ரியான் பராக் நல்லவரா அல்லது கெட்டவரா என்பது பற்றியது கிடையாது. அது அவருடைய தேர்வு நியாயமான முறையில் இருக்கிறதா? அவருக்கு சாதகமாக எது இருக்கிறது என்பதைப் பற்றியதாகும்”
“ஆனால் நாம் அவ்வப்போது ஒருவருடைய கேரக்டர் மேலே கற்களைத் தூக்கி எறிகிறோம். அப்படி ஒருவருடைய கேரக்டரை விமர்சிப்பது எனக்கு கவலையளிக்கிறது. விளையாட்டு எப்போதும் அவ்வளவு கீழே செல்லக்கூடாது என்பதை மீண்டும் சொல்கிறேன். ஒருவருடைய ரசிகன் மற்றவர் மேலே வெறுப்பை வைத்திருக்கக் கூடாது. சில சமயங்களில் ஒரு திரைப்படத்தைப் போல ரசிகனாக நாம் கண்ணோட்டத்தை வைத்திருப்போம்”
இதையும் படிங்க: சுப்மன் கில் ஒன்னும் சாம்சன் இடத்தைப் பிடிக்க வரல.. சாம்சன் 2க்கும் ஒத்துப்போறாரு.. சூரியகுமார் பேட்டி
“அது சரியாக இருக்காது. ஒருவருடைய ரசிகர் எப்படி பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்சித் ராணா ஆகியோரை விமர்சிக்க முடியும்” என்று கூறினார். இதற்கிடையே டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவின் வீரர்கள் பொறுப்புடன் விளையாடுவது காரணம் என்று பிசிசிஐ செயலாளர் தெரிவித்தார். அதனால் 2027 உலகக்கோப்பை வரை கம்பீர் பயிற்சியாளராக தொடர்வார் என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



